Breaking News

வெள்ள பாதிப்பு: பி.எஃப். முன் தொகை ரூ.5,000 வழங்கப்படும்



வெள்ள பாதிப்பு பகுதிகளைச் சேர்ந்த தகுதியுடைய பி.எஃப். சந்தாதாரர்களுக்கு திரும்பச் செலுத்தத் தேவையில்லாத வகையில், முன்தொகை ரூ.5,000 வழங்கப்படும் என்று சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
"சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர், அதை எதிர்கொண்டு மீளுவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இத்தகைய பேரிடர் சூழ்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.)
சந்தாதாரர்களுக்கு திரும்பச் செலுத்தத் தேவையில்லாத வகையில் ரூ.5,000 அல்லது வருங்கால வைப்பு நிதியில் அவர்களது பங்களிப்பில் 50 சதவீதம் எது குறைவோ அது முன் தொகையாக அளிக்கப்படும். அரசு அறிவிக்கையின் அடிப்படையில்...: பாதிப்பு ஏற்பட்ட இடங்கள் குறித்து தமிழக அரசு வெளியிடும் அறிவிக்கையின் அடிப்படையில், வெள்ளத்தில் சேதமடைந்த சொத்து (அசையும் சொத்து, அசையா சொத்து) குறித்து உரிய தமிழக அரசு அதிகாரியிடம் சான்றிதழ் பெற வேண்டும். பின்னர் பி.எஃப். அலுவலகப் படிவம் 31-ஐ பூர்த்தி செய்து பி.எஃப். அலுவலகத்தில் அளிக்க வேண்டும். 4 மாதங்களுக்குள் கிடைக்கும்: சந்தாதாரர்களின் இத்தகைய படிவத்தை ஆய்வு செய்து தமிழக அரசின் அறிவிக்கை வெளியான தேதியிலிருந்து 4 மாதங்களுக்குள் திரும்பச் செலுத்தத் தேவையில்லாத முன்தொகை அளிக்கப்படும் என்று எஸ்.டி.பிரசாத் தெரிவித்துள்ளார். முகப்பேர் பி.எஃப். அலுவலகத்துக்குட்பட்டோர்...: சென்னை முகப்பேரில் உள்ள பி.எஃப். அலுவலகத்துக்குள்பட்ட அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சந்தாதாரர்கள், தமிழக அரசின் அறிவிக்கை வெளியானவுடன் படிவம் 31-ஐ பூர்த்தி செய்து அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.