Breaking News

தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு கிடையாது: உயர்நீதிமன்றம்


     தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு விலக்கு அளிக்கமுடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

          இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி கிருபாகரன், கட்டாய தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்தார். 

நிம்மு வசந்த் வயதானவர் என்பதாலும், சமூக சேவகர் என்பதாலும் அவருக்கு அபராதம் ஏதும் விதிக்காமல் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.அப்போது, காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ஒரு லட்சத்து ஆயிரத்து 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலோ, புறநகர் பகுதிகளிலோ சரியாக பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை என்று நீதிபதி கிருபாகரன் கூறினார்.

இதே நிலை நீடித்தால் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.புறநகர் பகுதிகளிலும், மாவட்டங்களிலும், தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கின் விசாரணையை வரும் 19-ம் தேதிக்குதள்ளிவைத்தார்.