விருத்தாசலம் அருகே ஆசிரியர் ஒருவர், முகம் தெரியாத முகநுால் நண்பர்கள் உதவியுடன், ஊராட்சிப் பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக ஹைடெக் பள்ளியாக மாற்றியதுடன் தங்கள் பள்ளி பிள்ளைகளின் தந்தைகளை குடிப்பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் பணியிலும் ஈடுபட்டு அனைவரின் பாராட்டுகளையும் அள்ளி வருகிறார்.
விருத்தாசலம் அடுத்த கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை தரணி உட்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அதில், இடைநிலை ஆசிரியர் வசந்தன், 33; என்பவர், இப்பள்ளியைத் தனியார் பள்ளியைப் போன்று மாற்றியமைக்க தீர்மானித்து, தனது நண்பர்கள் மற்றும் முகநுாலில் முகம்தெரியாத நண்பகளின் உதவியை நாடினார்.
அவர்கள் உதவியுடன், கடந்த ஓராண்டில் இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றம் கண்டுள்ளது. 6 லட்சம் ரூபாயில், குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ் முறையில் பாடம் நடத்த புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக், டேபிள், சேர் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள், சுத்திகரிப்பு சாதனத்துடன் கூடிய குடிநீர் டேங்க் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பாடங்களைக் கற்கின்றனர்.
சத்தமின்றி சமுதாயப் பணி...
இவரது பணி இத்துடன் நின்று விடாமல் பள்ளி மாணவ, மாணவியர்களின் குடிப்பழக்கத்திற்கு ஆளான அவர்களின் அப்பாவிற்கு கடிதம் எழுத பயிற்சியளித்து; அந்த கடிதத்தை அவர்களின் தந்தையிடமே கொடுத்து படிக்கச் சொல்லி திருத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வெற்றி கண்டு வருகிறார்.
உதாரணமாக கடிதத்தில், 'அன்புள்ள அப்பாவுக்கு, எனக்கு நீ வேணும்பா, குடிக்கிறவங்க நிறையபேரு செத்துப் போயிருக்காங்கன்னு 'டிவி'யில பேப்பர்ல நியூஸ் வந்துட்டே இருக்கு. அந்த மாதிரி நீயும் செத்துப் போயிட்டா நாங்க நடுத்தெருவுல தான் நிக்கணும். அம்மாவால மூணு வேள சோறு கூட ஆக்கிப் போட முடியாது. அப்புறம் எங்கள யாரு படிக்க வக்கிறது, யாரு காப்பாத்துறது. இந்த கஷ்டத்தால அம்மாவும் செத்துப் போச்சுன்னா, நாங்க பிச்சைதான் எடுக்கணும். இதுக்குப் பேசாம எங்களைக் கொன்னுட்டு, அப்புறமா நீ சந்தோஷமா குடி. என்னவிட உனக்கு சாராயம் பெரிசு இல்லைன்னு தெரியும். தயவு செஞ்சி குடிக்கிறத நிறுத்து அப்பா' என்ற நெஞ்சைத் தொடும் கடிதத்தைப் படித்து இதுவரை 2க்கும் மேற்பட்ட மாணவர்களின் தந்தைகள் இனி குடிக்க மாட்டோம் என சத்தியம் செய்துள்ளதாகவும் கூறுகிறார் வசந்தன்.
தேடி வரும் கவுரவம்...
ஆசிரியர் வசந்தனை, கல்வித்துறை சார்பில் தமிழகத்திலிருந்து பத்து ஆசிரியர்களில் ஒருவராக தேர்வு செய்து, கடந்த ஜூலை 7 முதல் 21ம் தேதி வரை ராஜஸ்தானில் நடந்த பொம்மலாட்டப் பயற்சிக்கு அனுப்பி வைத்தது. மேலும், இவர் முகநுாலை சமூக அக்கறையுடன் பயன்படுத்தியதைப் பாராட்டி, காஞ்சி முத்தமிழ்ச்சங்கம், கடந்த ஆகஸ்டு மாதம் காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில், முகநுால் (Face Book) வேந்தர் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியில் பணிக்குச் சேர்ந்தேன். துவக்கப் பள்ளியாக இருந்தபோது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி கிராம மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியதைத் தொடர்ந்து, தரம் உயர்த்தப்பட்டது. அதே போல், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த எத்தனித்து, வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் உதவியுடன் முகநுாலில், (Face book) பள்ளிக்குத் தேவையான பொருட்கள், வசதிகள் குறித்து பதிவேற்றம் செய்ததும், முகம் தெரியாத பலர் உதவ முன்வந்தனர். அவர்கள் வழங்கிய நிதியில் பள்ளிக்கு 'ஏசி', புரொஜக்டர், வகுப்பறையில் டிஸ்னி லேண்ட் போன்ற வரைபடங்கள் உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்ற முடிந்தது. இப்பகுதி அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் குமார், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சாதனத்தை வழங்கினார். இதற்கு தலைமை ஆசிரியை தரணி மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர்.