Breaking News

ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு:நேற்று நடந்த வழக்கின் முழு விபரம் .


ஆசிரியர் நியமன தகுதித்தேர்வு விவகாரத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்–முறையீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. எதிர் தரப்பினருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசாணை
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ்முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரைகிளையிலும் சிலர் வழக்குகள் தொடுத்தனர்.

ஐகோர்ட்டு தீர்ப்பு
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும் அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட்டு விசாரணை
இதைத் தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்–முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் ராமமூர்த்தி ஆஜராகி, ‘‘ஆசிரியர் நியமன தகுதி தேர்வு தொடர்பான மூல வழக்கு ஏற்கனவே இந்த கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தற்போதைய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மற்றும் அந்த மூல வழக்கு ஆகிய இரண்டும் அரசாணை 25–ஐ குறித்த வழக்குகளாகும். எனவே இந்த மேல்முறையீட்டை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு மூல வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்’’ என்று கேட்டார்.
நோட்டீசு
எதிர்தரப்பினர் (மதுரை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த) வின்சென்ட் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் மற்றும் வக்கீல் சிவபாலமுருகன் ஆகியோர் தங்களுடைய வாதத்தில், ‘‘ஏற்கனவே பலரும் இந்த ஆசிரியர் நியமன தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம்எதுவும் பெறாமல் உள்ளனர். ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு சரியானதே’’ என வாதிட்டனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் இந்த மனுவை மூல வழக்குடன் சேர்த்து விசாரிக்க அனுமதிக்கப்படும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் வின்சென்ட் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர்தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவின் மீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
மற்றொரு வழக்கு
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை கடந்த நவம்பர் மாதம் 10–ந் தேதி விசாரணைக்கு ஏற்று, அதன் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.