Breaking News

ரூ.48 ஆயிரத்தில் சோலார் கார்: 9ம் வகுப்பு மாணவன் அசத்தல்


டிஸ்கவரி சேனலில் வரும் நிகழ்ச்சியை பார்த்து, 48 ஆயிரம் ரூபாய் செலவில், சோலார் கார் தயாரித்து, அறிவியல் கண்காட்சியில், முதல் பரிசை தட்டி சென்றான், 9ம் வகுப்பு மாணவன் பாலசுப்ரமணியன்.


பள்ளிக்கரணை, ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர், கார்த்திக்கேயன். அவரது, மகன் பாலசுப்ரமணியன், 14. அவன், பள்ளிக்கரணை காமகோட்டி நகரில் ஸ்ரீ சங்கர பாலா வித்யாலயா பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான்.அவனது பள்ளியில், கடந்த மாதம் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில், சூரிய சக்தி மூலம் இயங்கும் காரை பாலசுப்ரமணியன் காட்சிக்கு வைத்தான். அந்த கண்டுபிடிப்பிற்காக, அவனுக்கு முதல் பரிசு கிடைத்தது.

ஒரு முறை சக்தியூட்டினால், 100 மீட்டர் வரை செல்லும் அந்த காரை உருவாக்க, மாணவனுக்கு இரண்டு மாதங்கள் ஆகின. ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் வகையில், அந்த காரை வடிவமைத்து உள்ளான் மாணவன். காரில் உள்ள, 12 வோல்ட் பேட்டரியில் சோலார் பேனல் மூலம், சூரிய சக்தி மின் சக்தியாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது.

இதுகுறித்து பாலசுப்ரமணியன் கூறியதாவது: 

நான் சிறு வயதில் இருந்தே, டிவியில் டிஸ்கவரி சேனல் விரும்பி பார்ப்பேன். அதில் வரும் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருநாள், நிகழ்ச்சி ஒன்றில், சூரிய சக்தி மூலம் இயங்கும் கார்கள் பற்றி விவரிக்கப்பட்டது. அதை பார்த்ததும், மாற்று எரி சக்தியாக சூரிய சக்தியை பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் மாசும் குறையும் என்ற தகவல் என்னை மிகவும் கவர்ந்தது. அதுகுறித்து, என் பெற்றோரிடம் கூறி, அறிவியல் ஆராய்ச்சி செய்ய சம்மதம் பெற்றேன். பள்ளியில் நடக்கவிருந்த அறிவியல் கண்காட்சியில், அதை காட்சி படுத்த திட்டமிட்டேன்.

கார் தயாரிப்பதற்காக, இயற்பியல் ஆசிரியரின் உதவியை நாடினேன். அவர்களின் வழிகாட்டலின் படி செயல்பட்டு காரை வடிவமைத்தேன். என் பெற்றோர், எனக்கு பக்க பலமாக இருந்தனர். கார் தயாரிக்க 48 ஆயிரம் ரூபாய் செலவானது. கார் வடிவமைத்தல், அதற்கான பாகங்களுக்கு 8,000 ரூபாயும், சோலார் பேனலுக்கு 40 ஆயிரம் ரூபாயும் செலவு பிடித்தது. 

இன்னும் இந்த காரின் சக்தியை அதிகரிக்கவும், அதிக துாரம் செல்லவும், ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையில் சோலார் கார் தயாரிப்பதே என் அடுத்த இலக்கு. இவ்வாறு, பாலசுப்ரமணியன் கூறினான்.