அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் (எஸ்.எஸ்.ஏ.,), 2014-15ம் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வித் தரத்தை அளவிட, அடைவுத்தேர்வுகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், எஸ்.எஸ்.ஏ., சார்பில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை குறித்து அளவீடு செய்வதற்கு அரசு, நகராட்சி, நலத்துறை, உதவிபெறும் பள்ளிகளில் அடைவுத்தேர்வுகள் நடத்தி வருகிறது.
இத்தேர்வின் முடிவுகளை கொண்டு, எதிர்வரும் கல்வியாண்டுகளில் கற்பித்தல் முறையில் மாற்றங்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வு விரைவில் நடக்கவுள்ளது. அடைவுத்தேர்வுகள் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டாரத்துக்கு, 10 பள்ளிகள் வீதம் தேர்வுசெய்து இத்தேர்வுகள் நடக்கும்.
கோவை மாவட்டத்தில், 22 வட்டாரங்களில், 220 பள்ளிகள், அடைவுத்தேர்வுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 660 கண்காணிப்பாளர்களும், மாநில ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், 22 பேர் மேற்பார்வையாளர்களாக நியமிக்கும் பணிகள் நடந்துவருகிறது. அடைவுத்தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நடத்தப்படுகிறது.
இத்தேர்வுகளின் முடிவுகள் மதிப்பீட்டு செய்யப்பட்டு, பாடவாரியாக மாணவர்களின் தரம், வாசிப்பு திறன், அடிப்படை கணித கணக்கீடு உள்ளிட்ட அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இத்தேர்வுகளுக்கு மாவட்டங்களில், செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கண்காணிப்பாளர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் விபரம், கேள்வித்தாள் வடிவமைப்பு பணி குறித்து நாளை மாலைக்குள் சமர்ப்பிக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.