Breaking News

100% தேர்ச்சி இலக்கு - அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனிமேஷன் பாட டிவிடிகள்.


 எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய டிவிடிகள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.


             தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒவ்வொரு அரசுப் பள்ளிகளும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற, மாநில கல்வித்துறை பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றது. இதற்காக, பள்ளிக் கல்வித்துறை, பல்வேறு திட்டங்களையும், புதிய செயல்பாடுகளையும் வகுத்து வருகிறது.

அனிமேஷன் பாடங்கள்:
காலை மற்றும் மாலை வேளையில் கூடுதல் வகுப்புகள், திருப்புதல் தேர்வுகள், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என, அனைத்து வகையிலும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், எத்தனை புதிய செயல்பாடுகள், முயற்சியும் செய்தாலும், அரசுப் பள்ளிகளில் நுாறு சதவீத தேர்ச்சி என்பது, பெரும்பாலும், அரிதாகவே காணப்படுகிறது.


தனியார் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டிபோட முடியாத நிலை இன்றும் தொடர்கிறது. இதனை மாற்றிக் காட்ட, நடப்பு கல்வியாண்டில், புதிய கல்வி செயல் திட்டத்தை மாநில கல்வித் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.


அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, பாடங்கள் அடங்கிய, டிவிடி தயார் செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.


இதற்காக, பாடங்கள் முழுவதும் அனிமேஷன் முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த, அனிமேஷன் பாடங்களுடன், தேர்வில் தேர்ச்சிபெறும் யுக்திகள் அடங்கிய டிவிடிகள் தயாரிக்கப்பட்டன. இந்த டிவிடிகள் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் கடந்த வாரம் வழங்கப்பட்டது.


டிவிடி வினியோகம்
           எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மட்டும் இந்த, டிவிடியை மாநில கல்வித் துறை வழங்கியதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிரத்யேக பாட வகுப்புகள் அடங்கிய, டிவிடியை காஞ்சிபுரம் மாவட்ட கல்வித் துறையே தயார் செய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள சிறந்த ஆசிரியர்களை கொண்டு, அனைத்து பாடங்களும் நடத்தப்பட்டு, வீடியோ பதிவுகள் அடங்கிய டிவிடிகள் தயாரித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.


         இதன்மூலம், கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துக் காட்ட மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 2013-14ம் கல்வியாண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி 87.9 சதவீதம். இது முந்தைய 2012-13ம் கல்வியாண்டை காட்டிலும், 3.2 சதவீதம் அதிகம். ஆனால், மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களையும் தனியார் பள்ளிகளே பெற்றன.
100 தேர்ச்சி வருமா?


                      ஒரு அரசு பள்ளி மாணவர் கூட, எந்த பாடத்திலும் 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை. எந்த ஒரு அரசுப் பள்ளியும் நுாறு சதவீத தேர்ச்சியை பெறவில்லை. இந்த குறைபாடுகளை களையவே, நடப்பாண்டில் புதிய கல்வி முறையை மாவட்ட கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.


           இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், "மாநில கல்வித்துறை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி.,க்கும்; மாவட்ட கல்வித்துறை சார்பில், பிளஸ் 2விற்கும் வழங்கப்பட்ட டிவிடிகள் இரண்டுமே பிரத்யேகமானவை. பிளஸ் 2 வகுப்பிற்காக கடந்த பல மாதங்களாக சிரமப்பட்டு, இந்த டிவிடியை தயார் செய்துள்ளோம். இந்த டிவிடி மூலம் பல்வேறு வகுப்புகள் நடத்தப்பட்டு, நுாறு சதவீத தேர்ச்சியடைய முயற்சிப்போம்" என்றார்.