Breaking News

5 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்படும் லேப் உபகரணங்கள்: பள்ளிகளில் பயன்பாடின்றி தேங்கியுள்ள அவலம்

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஆண்டு தோறும் வழங்கப்படும் லேப் உபகரணங்கள் பள்ளிகளில், பயனற்று தேங்கி கிடப்பதால், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


நிதி:


தமிழகத்தில், மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கு, பல்வேறு தலைப்புகளில், நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஆண்டுதோறும் பள்ளி மானிய நிதியாக, ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் அறிவியல் உபகரணங்கள், 25 ஆயிரம் ரூபாய்க்கும், மின்சார மற்றும் போன் பில்லுக்கு, 15 ஆயிரம் ரூபாயும், செய்தித்தாள் மற்றும் இதழ்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. கடந்த, 2009 - 10ம் ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக, ஆண்டுதோறும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக, 5,700க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, 15 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழக அரசு உயர்நிலைப்பள்ளிகளில், இதுவரை லேப்களுக்கு என தனியாக அறை வசதியும், அதற்கான டேபிள், அலமாரி உள்ளிட்ட எந்த வசதியும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் லேப் உபகரணங்கள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வழங்கி வருவதால், அவை தலைமை ஆசிரியருக்கு பெரும் சுமையாக மாறிவருகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட லேப் உபகரண, 'பார்சலை' கூட பிரிக்காமல் பயனற்று கிடந்த நிலையில், நடப்பு கல்வியாண்டிலும், கணித ஆய்வகம் மற்றும் அறிவியல் ஆய்வக பொருட்களே வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆய்வக பொருட்களை வழங்கி, அவை பயனற்று கிடப்பதை விட, விளையாட்டு உபகரணம் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தரம் குறைவு:


இதுகுறித்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் எந்த உயர்நிலைப்பள்ளிக்கும் லேப் அறை மற்றும் அதற்கான வசதி செய்து தரப்படவில்லை. ஆனால் திட்ட நிதியில் பணம் வருகிறது என்பதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் லேப் கருவிகளுக்கு என, ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், ஒரே நிறுவனத்தின் மூலம் இந்த உபகரணங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இவை விலைக்கேற்ற தரத்தில் இருப்பதில்லை. இயக்குனரக உத்தரவின் காரணமாக அவர்களிடமே வாங்க வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக வேண்டியுள்ளது. லேப் அறை வசதி இல்லாததால், பெரும்பாலான உயர்நிலைப்பள்ளிகளில், 'பார்சலை' பிரிக்காமலேயே பத்திரமாக பாதுகாக்கின்றனர். பல முறை கோரிக்கை விடுத்தும், லேப் உபகரணங்களே மீண்டும் மீண்டும் வழங்குவது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது. பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்களே இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்கு எந்த திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. அதுமட்டுமின்றி, அவை ஆண்டுக்கொருமுறையாவது கொள்முதல் செய்யவேண்டியிருக்கும். இதுபோல் மாணவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்கள் வாங்க இந்நிதியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்