மாற்றுத் திறனாளிகளுக்கான, பின்னடைவு காலியிடங்கள் பற்றிய நிலையை விளக்க, துறை ஆணையர் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் உரிமை சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம், அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அனைத்து துறைகளிலும், மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்ப வேண்டும் என, கூறியுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 1,107 பின்னடைவு காலியிடங்கள், நிரப்பப்பட வேண்டியதுள்ளது. மூன்று மாதங்களில், பின்னடைவு காலியிடங்களை நிரப்பும்படி, உயர்நீதிமன்றமும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசின் உத்தரவை பின்பற்றாமல், பட்டதாரி ஆசிரியர் தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம், அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
இதனால், எங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது. இம்மனுவை விசாரித்த, முதல் பெஞ்ச், மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்ப, அரசு எடுத்த நடவடிக்கை பற்றி தெரிவிக்குமாறு, உத்தரவிட்டிருந்தது. டந்த செப்டம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: தற்போது உள்ள காலியிடங்களின் நிலைமை, இன்னும் தெளிவாக இல்லை. எனவே, அரசின் நிலையை விளக்க, மாற்றுத் திறனாளிகளுக்கான துறையின் ஆணையர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். விசாரணை, வரும், 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது