Breaking News

புதன்கிழமை விண்ணில் மிதக்கும் வால் வெள்ளியில் தரையிறங்குகிறது ESA இன் Rosetta விண்கலம்

     

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA இன் றொசெட்டா (Rosetta) என்ற விண்கலம் தனது இலக்கை எட்டும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
அதாவது இன்னும் இரு நாட்களில் அதாவது எதிர்வரும் புதன்கிழமை இவ்விண்கலம் விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் வால்வெள்ளி ஒன்றில் தரை இறங்கவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் முதன் முறையாக வால்வெள்ளி ஒன்றின் மீது மனித உபகரணம் ஒன்று இறங்கி ஆய்வு செய்வது என்ற விடயமானது விஞ்ஞானப் புனைவு கதையாக இருந்து விஞ்ஞான பூர்வமான சாதனையாக மாறவுள்ளது. சுமார் 10 வருடங்களாகப் பயணித்த Rosetta விண்கலம் 67P என்ற வால்வெள்ளியில் இரு நாட்களில் இறங்கி விடும். இந்நிலையில் Rosetta விண்கலத்தின் செயற் திட்டம் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். சுமார் 1 வருட காலத்துக்கு 67P வால்வெள்ளியின் தரை மேற்பரப்பில் தங்கி குறித்த வால்வெள்ளி சூரியனை அண்மிக்கும் போது அது எவ்வாறு பிரகாசிக்கின்றது அல்லது அதன்போது ஒரு செக்கனுக்கு 100 Kg சடப்பொருளை வெளியேற்றி எவ்வாறு மாற்றம் அடைகின்றது என்பதையும் அவதானிக்கவுள்ள Rosetta அடுத்த வருடம் கோடைக் காலத்தில் சூரியனில் இருந்து 180 மில்லியன் Km அண்மைக்கு சென்று விடும்.
வால்வெள்ளிகளில் இருந்து நேரடியாக மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்யும் பட்சத்தில் நமது சூரிய மண்டலத்தில் பூமியில் எவ்வாறு தண்ணீர் மூலக் கூறுகள் வந்தடைந்தன மற்றும் ஆர்கனிக் பொருட்களும் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான புரோட்டின் கட்டமைப்புக்கள் எவ்வாறு தோன்றின என்பது போன்ற கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதைவிட சூரிய குடும்பத்தில் கிரகங்கள் எவ்வாறு தோன்றின பின்னர் எப்படி இந்த நிலமைக்குப் பரிணாமம் அடைந்தன ஆகிய வினாக்களுக்கும் வால் வெள்ளிகள் பதில் அளிக்கக் கூடியவை எனப் படுகின்றது.
இதை விட விஞ்ஞானம் மட்டுமல்லாது மத மற்றும் தத்துவ ரீதியான கேள்விகளான நாங்கள் எங்கிருந்து இப்பூமிக்கு வந்தோம்? எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்? இப்பிரபஞ்சத்தில் நாம் தனித்து உள்ளோமா? என்ற கேள்விகளுக்கும் வால் வெள்ளிகள் மீதான ஆராய்ச்சி பதிலளிக்கக் கூடியதே எனப்படுகின்றது