Breaking News

2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா & சத்தியார்த்தி : ஓர் விரிவான பார்வை

     

2014 ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு, உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்தும், சிறுவர்களுக்கான கல்வி உரிமையை வலியுறுத்தியும் குரல்கொடுத்து வந்த இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் பாகிஸ்தானியப் பெண் மலாலா. இவருக்கு வயது 17 மாத்திரமே. மற்றையவர் இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி. இவருடைய வயது 60.
இதில் ஒருவர் முஸ்லீம். மற்றையவர் இந்து. யூசப்சை மலாலா பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு குடியிருப்புப் பகுதிகளில் பெண் சிறார்கள் பள்ளிக்கு செல்வதற்கும் கல்வி கற்பதற்கும் தலிபான்களால் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராடியவர். இதனால் 2012 அக்டோபரில், தான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த தருணம் ஒன்றில் தலிபான்களால் நேரடியாக சுடப்பட்டு உயிர் தப்பியவர். 2012 இல் டைம்ஸ் சஞ்சிகையால் நடத்தப்பட்ட இந்தவருடத்திற்கான நபர் யார் எனும் வாக்கெடுப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் உலகை அதிகம் ஈர்த்த 100 நபர்களில் ஒருவராக தெரிவானார். தற்போது தனது 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளார். உலகில் மிக இளவயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது நபரும் மலாலா தான்.
சத்தியார்த்தி இந்தியா சார்பில் நோபல் பரிசு பெற்ற ஐந்தாவது நபர் ஆவார். முன்னதாக ரபீந்திரநாத் தாகூர், சி.வி.ராமன், அன்னை தெராசா, அமர்த்தியா சென் ஆகியோர் நோபல் பரிசு வென்றிருந்தனர். அதோடு சத்தியார்த்தி அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் ஆவார். அன்னை தெராசாவுக்கு முன்னர் கிடைத்திருதது.
ஆனால் இவர்கள் ஐவரிலும் சத்தியார்த்திக்கு உள்ள பெருமை என்னவென்றால், இந்தியாவின் எல்லைக்குள்ளேயே பிறந்து வளர்ந்து அங்கேயே தற்போது வசித்து வரும் நபர்களில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் இவர் தான். சத்யார்த்தி இந்தியாவில் சிறார்களில் உரிமைகளுக்காக மிக நீண்டகாலமாக போராடி வருகிறார். குறிப்பாக குழந்தை தொழிலாளர்கள் விடயங்களில் அவரது அக்கறை அதிகமாக உள்ளது. புதுடெல்லியை மையமாக கொண்ட அவரது தொண்டு நிறுவனமான Bachpan Bacjp Andolan, சிறார் தொழிலாளர்கள், சிறார் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், சிறார் அடிமைகளாக இருப்பவர்களை மீட்டு வருகிறது. தனக்கு நோபல் பரிசு கிடைக்கப்பட்டதை அடுத்து சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய செவ்வியில்,
"இவ்விருது இந்தியாவுக்கானது. சிறார் அடிமைகளாக இருப்பவர்கள், சிறார் தொழிலாளர்களாக இருப்பவர்கள், சிறார் கடத்தலால் பாதிக்கப்படுபவர்கள் என இன்னமும் துன்பத்தில் வாடும் அனைத்து சிறுவர்களுக்குமாக இவ்விருதை அர்ப்பணிக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
நோபர் பரிசுக் கமிட்டிக் குழு இவ்விருதை அறிவித்த போது, இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. "ஒரு இந்து - ஒரு முஸ்லீம், ஒரு இந்தியன் - ஒரு பாகிஸ்தானி என இவர்கள் இருவரும் ஒரே குரலில், சிறார்களின் கல்வி உரிமை, சிறார்களுக்கு மீதான கடும் போக்குவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள். இவர்களுக்கு பல்வேறு தனிநபர்களும் பல்வேறு அமைப்புக்களும் இணைந்து பங்களிப்பு செலுத்தி வருகின்றன.
தற்போது உலகம் முழுவதும் 168 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். 2000ம் ஆண்டு 78 மில்லியன் அதிகமாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்திருப்பதே, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக இந்த உலகம் ஒன்றாக குரல் கொடுத்து தனது இலக்கை நெருங்கத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறி" என தெரிவித்திருந்தது.
யூசப்சை மலாலா தனது 16வது பிறந்த தினத்தில் ஐ.நாவில் உரையாற்றிய சிறப்பு உரையின் போது "ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா இந்த உலகை மாற்ற முடியும்".
எனக் கூறியிருந்தார்.
ஐ.நாவினால் நவம்பர் 10ம் திகதி மலாலா தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் 50,000 பெண் சிறார்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு உள்ளதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரும், கல்விக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதுவருமான பிராவுண் தெரிவித்துள்ளார்.
மலாலா தற்போது தனக்கு வழங்கப்படவுள்ள நோபல் பரிசு விழாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்பும் ஒன்றாக இணைந்து கலந்து கொள்ளவேண்டும். இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நல்லுறவு நீடிப்பதற்கான பிரதிபலிப்பாக இது இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
 "இந்தியாவில் பல நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மில்லியன் கணக்கான தீர்வுகள் உள்ளன" - கைலாஷ் சத்தியார்த்தி

கைலாஸ் சத்தியார்த்தி 1990 களிலிருந்து சிறுவர்களை தொழிலாளர்களாக பணிப்பதை எதிர்த்து போராடி வருகிறார். இவரது பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்று இயக்கம்) இதுவரை 80,000க்கு மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப் பணிகளிலிருந்து தடுத்து அவர்களது மீள்வாழ்வு, மீளினைப்பு மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.
இத்தாலியின் செனட் பதக்கம், ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை விருது, தி ஆக்னர் சர்வதேச அமைதிக்கான விருது, நெதர்லாந்தின் தங்கக் கொடி விருது என பல உயரிய கௌரவ விருதுகளை வென்றிருந்த சத்தியார்த்தி அமெரிக்காவின் நவீன அடிமை முறை ஒழிக்கும் நாயகர் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார்.
இவரது பணி இந்தியாவில் மாத்திரமல்ல. முழு தெற்காசியாவுக்கும் விரிவடைந்திருந்தது. தெற்காசியாவில் சிறுவர் தொழிலாளர்களை ஈடுபடுத்தாது கம்பளங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தனித்து அடையாளம் காட்டி அவற்றின் உற்பத்திப் பொருட்களை மாத்திரம் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யவேண்டும் எனும் இவர் மேற்கொண்ட பிரச்சாரத்தின் பயனாகவும் அதற்காக இவர் கொண்டுவந்த ரக்மார்க் எனும் சுயச் சான்றிதழ் முறையும் உலகளாவிய ரீதியில் பாரிய தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வீதத்தை மாற்றி அமைத்தது. இவர் அறிமுகப்படுத்திய இந்த புதிய முறை தற்போது குட் வீவ் என மாற்றம் பெற்றுள்ளது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இத்தகைய சான்றிதழ் கொண்ட கம்பளங்களையே வாங்க 1980 களிலும் 1990 களிலும் இவர் அதிக பரப்புரை மேற்கொண்டார். இதன் மூலம் சிறார் தொழிலாளர்களைக் கொண்டு தமது உற்பத்திப் பொருட்களை பெருக்கும் தெற்காசிய நிறுவனங்களின் பொருட்கள் அதிகமாக சந்தைப்படுத்தப்படுவதில் வீழ்ச்சி ஏற்பட்டது.
பிரபல கார்டியன் இணையத்தளம், தனது திரைப்பட படைப்பாய்வகத்தைக் கொண்டு உருவாக்கிய Modern-day Slavery in Assam ஆவணத் திரைப்படம், அசாமில் உள்ள உலகப் புகழ் பெற்ற Tetley Tea தேயிலை உற்பத்தி நிறுவனத்தின், விளைச்சல் நிலங்களில் பணிபுரியும் சிறார்களை விடுவிக்கவும், இளம் பருவ வயதில் காணாமல் போகும் பெண் பிள்ளைகளை மீட்டு அவர்களுடைய பெற்றோர்களுடன் இணைக்க சத்தியார்த்தியும் அவரது ஏனைய சகாக்களும் எடுக்கும் ஆபத்தான முயற்சிகள் பற்றியும் எடுத்துரைக்கிறது.
இந்த ஆவணத் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில், சத்தியார்த்தி தனது அனுபவ பகிர்வின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பங்களில், எனது கால்கள் முறிக்கப்பட்டு, எனது தலை உடைக்கப்பட்டு, எனது தோல்மூட்டுகள் சுருக்கப்பட்டு அனைத்து ஆபத்துக்களையும் எதிர்கொண்டிருக்கிறேன். எனது இரு நண்பர்களை இழந்திருக்கிறேன். ஒருவர் தலையில் சுடப்பட்டும், மற்றையவர் சாகும் வரை அடித்தும் கொல்லப்பட்டனர். ஆகையால் இது இலகுவான நடவடிக்கை அல்ல. இது ஒரு நீண்ட போராட்டம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அடிமைத் தனத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றமாகும். எனது சொந்த நாட்டில் உள்ள எந்தவொரு தனிச்சிறாரின் சுதந்திரமும் பறிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு என்னால் பொறுமையாக இருக்க முடியாது."
தனது 34 வருட போராட்டத்தில், 10,000க்கும் அதிகமான இளம் இந்தியர்களை, அவர்களில் சிலர் ஐந்து ஆறு வயதில் முகவர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களை சத்தியார்த்தி மீட்டெடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில், விடிஷாவில் பிறந்து வளர்ந்த சத்தியார்த்தி அரச கல்லூரியில் மின் பொறியியல் படித்தவர். 1980ம் ஆண்டு பச்பன் பச்சோ அண்டோலன் நிறுவனத்தை ஸ்தாபித்தார். 1990 இல் நடைபெற்ற Global March Against Child Labour எனும் மாபெரும் கவனயீர்ப்பு பிரச்சார நிகழ்வின் பிரதான ஒழுங்கமைப்பாளராக இருந்து, உலகம் முழுவதும் நவீன அடிமைகளாக சிக்கியிருக்கும் மில்லியன் கணக்கான சிறார் பணியாளர்களுக்காக குரல் கொடுத்தார். அண்மையில் அவரது முழுவீச்சாக அவர் தொடங்கியுள்ள புதிய செயல் திட்டம், கட்டாயத் திருமணம் செய்து வைத்து அதன் பின்னர் அடிமைகளாக பாலியல் தொழில் வரை சீரழியும் இளம்பருவ பெண்களை கண்டுபிடித்து மீட்டெடுத்து அவர்களுக்கு மீள் நிவாரணம் வழங்குவதாகும்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள சத்தியார்த்தி எப்போதும் கூறிவரும் வாக்கியம் இது : "இந்தியாவில் பல நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மில்லியன் கணக்கான தீர்வுகள் உள்ளன"
"பாகிஸ்தானின் பிரதமராக வேண்டும்" : மலாலா

யூசப்சை மலாலாவுக்கும் அவரது 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. "தன்னை ஒரு வேளை தலிபான்கள் சுடுவதற்கு வந்தால், அவர்களிடம் பேசும் சந்தர்ப்பமாக அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்களது குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் சேர்த்தே தான் குரல் கொடுப்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்" எனக் கூறியவர் மலாலா.
"எனக்கும் பாகிஸ்தானில் இருந்த போது ஜஸ்டின் பீபர் போன்றவர்களின் மேற்கத்தேய பாடல்கள் பிடிக்கும். ஆனால் எப்போது பாகிஸ்தானை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடொன்றுக்கு வந்தேனோ அன்றிலிருந்து, எனது பாரம்பரிய உள்ளூர் இசையின் மகிமையை நன்கு உணர்கிறேன். இப்போதெல்லாம் விரும்பிக் கேட்பது அந்த இசை தான். இது போல் தான் கல்வியும். கல்வி கற்பதற்கான உரிமையும், சந்தர்ப்பமும் இலகுவாக உங்களுக்கு கிடைத்துவிடும். இதனால் சிலவேளைகளில் உங்களுக்கு புத்தகப் பை சுமையாக இருக்கலாம். ஆசிரியர்களின் கற்பித்தல் முறையும், கற்றல் பாடங்களும் சுமையாக இருக்கலாம். ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் படையெடுப்பின் முன்னர் எமக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் எப்போது கல்வி உரிமை பறிக்கப்படத் தொடங்கியதோ அன்று அதன் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கினோம். ஒரு பாகிஸ்தானிய சிறுவன், சிறுமி இளவயதில் கல்வி கற்பது தலிபான்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என புரிந்து கொண்டோம். ஆம், கல்வியின் ஆற்றல் குறித்து அவர்கள் பயப்படுகிறார்கள். அதுவும் பெண்கள் கல்வி கற்றால் எவ்வாறான ஆற்றல் பெறுவார்கள் என நினைத்து மிகவும் பயப்படுகிறார்கள். எனக்கு சிறுவயத்தில் மருத்துவராகவே விருப்பம் கொண்டிருந்தேன். ஆனால் மருத்துவர் ஒரு சிறு சமூகத்திற்கோ நன்மை பயக்க முடியும். ஒரு அரசியல் வாதி ஒரு நாட்டுக்கே நன்மை பயக்க முடியும் என்பதை உணர்கிறேன்.
எனது கனவுகள் தற்போது மேலும் உயர்வடைந்துள்ளது. பாகிஸ்தானின் பிரதமராக வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். பெருந்தொகை அரச நிதியை கல்விக்காக செலவிட வேண்டும். தலிபான்களால் எனது உடலை சுட்டுவீழ்த்த முடியும். எனது கனவுகளை சுட்டுவீழ்த்த முடியாது. நான் செல்லவேண்டிய தூரம் இன்னமும் நிறைய உண்டு. உலகின் எந்தவொரு சிறுவனும், சிறுமியும் கல்வி கற்கும் உரிமை கிடைக்கும் வரை இப்பயணம் தொடரும்" என ஒரு வருடத்திற்கு முன்னர் சி.என்.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேரடிச் செவ்வி ஒன்றில் மலாலா கூறியிருப்பார்.
2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யூசப்சை மலாலா, கைலாஷ் சத்தியார்த்தி ஆகிய இருவருக்கும் கிடைத்துள்ளது, நிச்சயம் அவர்கள் இருவரினதும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு கிடைத்த அங்கீகாரமே. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுமே இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய தருணம் இது.
மலாலா மற்றும் அவரது தந்தையுடனான குறித்த சி.என்.என் ஆங்கிலச் செவ்வியை முழுமையாக பாருங்கள். அவை நிச்சயம் நேர்மறையான பல எண்ணத் துளிகளை உங்களுக்குள்ளும் உதிர்க்க வைக்கும்.

நன்றி , தமிழ் மீடியா