Breaking News

பிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி

பிளஸ்–1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பிளஸ்–1 தேர்ச்சி மதிப்பெண்ணில் வேறுபாடு
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. பிளஸ்–1 வகுப்பில் நன்றாக படித்தால் தான் பிளஸ்–1 தேர்ச்சி பெற்று பிளஸ்–2 படிக்க செல்லமுடியும்.
பிளஸ்–1 வகுப்பில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பள்ளியிலும் மாறுபட்ட மதிப்பெண் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களை கொண்ட தேர்வுக்குழு உள்ளது. அந்த தேர்வுக்கு குழு பரிந்துரைத்த மதிப்பெண்ணை கொண்டுதான் தேர்ச்சியா? தோல்வியா? என்பதை அந்த பள்ளி முடிவு செய்கிறது.
பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை
குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்–2 தேர்ச்சி விகிதம் 100–க்கு 100 இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பிளஸ்–1 தேர்ச்சி சதவீதத்தை அதிக அளவில் வைக்கிறார்கள்.
இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டு சீனியர் வக்கீல் டி.முத்தரசன் அரசுக்கு குறிப்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீத மதிப்பெண்ணை விட அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் அதிகமாக உள்ளது. அதுவும் பள்ளிக்கூடத்திற்கு பள்ளிக்கூடம் மாறுபடுகிறது.
அரசு குறிப்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆகியவற்றில் பிளஸ்–1 மாணவ–மாணவிகளுக்கு தேர்ச்சி பெற ஒரே வித மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும். இல்லையென்றால் வருடந்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பெயிலாகி விடுகிறார்கள். அதனால் அவர்கள் மனநலமும் பாதிக்கப்படுகிறது. மேலும் பிளஸ்–2 படிக்காமல் படிப்பை நிறுத்திவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிடும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளாக இருந்தாலும் சரி, அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தாலும் சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளாக இருந்தாலும் சரி எந்த பள்ளிகளாக இருந்தாலும் ஒவ்வொரு பாடத்திலும் 35 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. இந்த மதிப்பெண் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அமலில் உள்ளது.
35 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்த பள்ளிகளாக இருந்தாலும் சரி, தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 35–க்கும் அதிகமாக நிர்ணயித்த பள்ளிகளாக இருந்தாலும் சரி அந்த பள்ளிகள் எந்த பள்ளிகள் என்று தெரிந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு த.சபீதா தெரிவித்தார்.