வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடற்கரையை நாடிச் செல்வோம். கடற்காற்றை அனுபவித்துக் கொண்டே நடப்போம். ஓங்கி உயர்ந்து ஓய்வின்றி வரும் அலைகளை ரசித்துக் கொண்டே தண்ணீருக்குள் இறங்குவோம். ஜில்லென்று ஓடிவரும் தண்ணீரில் கால்களை நனைத்து மகிழ்வோம்.
இதமான சூட்டுடன் கடல் தண்ணீர் இருக்கும் கடற்கரைக்குச் சென்றிருக்கிறீர்களா?
நியூசிலாந்து நாட்டில் கோரமண்டல் பெனின்சுலாவின் கிழக்குக் கடற்கரைதான் வெந்நீர்க் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.
விடியங்கா (Whitianga) வின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து 12 கி.மீட்டர் தூரத்திலும், ஆக்லாந்திலிருந்து (Auckland) 175 கி.மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது இந்த வெந்நீர்க் கடற்கரை.
இரண்டு கடல் நீரோட்டங்கள் பிரியுமிடத்தில்தான் வெதுவெதுப்பான நீராக உள்ளது. இது அண்டார்டிகா குளிர் நீரோட்டமும் பசிபிக் வெப்ப நீரோட்டமும் பிரியும் இடமாகும். புவிச் சூழலியல் மாற்றமே இங்குள்ள தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கக் காரணமாகும்.
கடற்கரையின் மணற்பரப்பில் பள்ளம் தோண்டி அந்த ஊற்றிலிருந்து வரும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். இயற்கை ஊற்றானது கடற்கரையின் எதிர்ப்புறத்தில் உள்ள ஆஃப் ஷோர் பாறை (Off-shore Rocks) அருகே காணப்படுகிறது.
இந்தத் தண்ணீரின் வெப்பநிலை 64 டிகிரி செல்சியஸ் இருக்கும். பள்ளம் தோண்ட மண்வெட்டியையும், தண்ணீரை எடுக்க வாளியையும் பயன்படுத்துகின்றனர். இவை, அருகில் உள்ள கடைகளில் வாடகைக்குக் கிடைக்கின்றன.
குறைந்த வேகத்திலான அலைகளே இங்கு காணப்பட்டாலும் சில நேரங்களில் பெரிய அலைகளும் வருவதுண்டு. பெரிய அலைகள், நீரோட்டங்கள் மற்றும் துளைகளின் மூலமாக ஆபத்துகள் வரலாம்.
லைஃப்கார்டு சேவை செயல்பட்டு வந்தாலும், நீச்சலில் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே தண்ணீரினுள் செல்வதற்கு அறிவுறுத்தப்படுகின்றனர். வெந்நீர்க் கடற்கரையில் குளிப்பது உடம்புக்கு மிகவும் நல்லது என்ற நம்பிக்கை மக்களிடையே பரவலாக உள்ளது
|