Breaking News

மாணவர்களே... அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்- அமைச்சர் அன்பில்!

 அடுத்த கல்வி ஆண்டில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தைக் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்



கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, சூலூர்‌, பாப்பம்பட்டி பிரிவு, கலைஞர்‌ கருணாநிதி பொறியியல்‌ கல்லூரியில்‌, இன்று (16.12.2024) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள்‌ பணி ஆய்வுக்‌ கூட்டம்‌ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி தலைமையில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ பள்ளிக்கல்வித்‌ துறை முதன்மை செயலாளர்‌ மதுமதி, தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின்‌ உறுப்பினர்‌ செயலர்‌ ஆர்‌.சுதன்‌ இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கிராந்திகுமார்‌ பாடி மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுருபிரபாகரன்‌ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏஐ பாடத்திட்டம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார். அவர் கூறும்போது, ''அரசுப் பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டத்தைக் கொண்டு வர, எஸ்சிஇஆர்டி மூலம் குழு உருவாக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

ஒரே மாநிலம் தமிழ்நாடு

அடுத்த ஆண்டில் எப்படியாவது ஏஐ பாடத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அமெரிக்காவில் வரும் தொழில்நுட்பம் அடுத்த நாளே தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதற்காகவே பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்குகிறார். இந்தியாவிலேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு''

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக் கூட்டத்தில், அரசின்‌ சார்பில்‌ பள்ளிக் கல்வித்‌ துறையில்‌ கொண்டுவந்துள்ள திட்டங்கள்‌ அனைத்தும்‌ முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா, விலையில்லா பொருட்கள்‌ மாணவர்களை சென்றடைகிறதா, குறிப்பாக மழையால்‌ பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்‌, மாணவர்களுக்கு புத்தகங்கள்‌, சீருடைகள்‌ முறையாக சென்றடைந்துள்ளதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.