Breaking News

தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக் கோரி மாணவ, மாணவியர் போராட்டம்

 திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே திருக்கண்டலத்தில் அரசினர் உயர் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் 397 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 


இப்பள்ளி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த 6 ஆண்டுகளாக நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஷாமிலி (55) என்பவர் கடந்த ஆண்டு ஜூன் முதல் பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமையாசிரியராக பொறுப்பேற்றதிலிருந்து, ”மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும். 


சிறப்பு வகுப்புகளில் கண்டிப்பாக அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும், சிகை அலங்காரம், உடை அலங்காரம் உள்ளிட்டவற்றை சரியாக செய்து பள்ளிக்கு வர வேண்டும்” என அறிவுறுத்தி வருவதாக தெரிகிறது.


அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளதால், டிசம்பர் 9-ம் தேதி முதல் நடைபெற உள்ள சிறப்பு வகுப்புகளில் பங்கேற்காத மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது எனவும் தலைமையாசிரியர் கூறியிருந்தார். இதனால் இப்பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தலைமையாசிரியர் தங்களை தரக்குறைவாக பேசுகிறார் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் 300-க்கும் மேற்பட்டோர், தலைமையாசிரியர் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும், அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரியும் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர் நவீன் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாவட்ட கல்வி அலுவலர், ”மாணவ, மாணவியரின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக” உறுதியளித்தார். இதையடுத்து, சுமார் 2 மணி நேரம் நீடித்த போராட்டத்தை கைவிட்டு, மாணவ, மாணவியர் பள்ளி வகுப்பறைகளுக்கு சென்றனர்.