Breaking News

பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியருக்கு மெமோ: விருதுநகர் ஆட்சியர் அதிரடி

 விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, பள்ளிக்கு தாமதமாக வந்த தலைமை ஆசிரியர், பொறுப்பாசிரியர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் திடீர் ஆய்வுக்குச் சென்றார். பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை ஆய்வு செய்த போது, மாணவர்களில் பாதி பேர் காலை உணவு முடித்திருந்தனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியரும் அமர்ந்து உணவருந்தி, உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது, இப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் காலை உணவுத் திட்ட பொறுப்பாசிரியர் ஆகியோர் பள்ளியில் இல்லை.



தொடர்ந்து, பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் ஆகியோரிடம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட்டது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்பு தலைமையாசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் உணவின் தரம், சுவை குறித்து ஆய்வு செய்த பிறகு உணவு வழங்க வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் உரிய நேரத்தில் வராத காரணத்தினால் காலை உணவினை மாணவர்களுக்கு பொறுப்பாளரும் சமையலறும் பரிமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் தலைமையாசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் வராதது குறித்து உரிய விளக்கம் அளிக்க தலைமையாசிரியர் மற்றும் பொறுப்பாசிரியருக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது