Breaking News

தனியாரிடம், 'எமிஸ்' தகவல் மையம் மாணவர் சுய விபரங்களுக்கு ஆபத்து?


பள்ளிக்கல்வியில், 'எமிஸ்' கல்வி மேலாண்மை திட்ட இணையதள பராமரிப்பு பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட சுய விபரங்களில், ரகசியம் காக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்திய அரசு உத்தரவுப்படி, மாணவர்கள் எண்ணிக்கையை போலியாக காண்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளில் தில்லுமுல்லு ஏற்படுவதை தடுக்கவும், தமிழகத்தில், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், மாணவர்களுக்கு, ௧௪ இலக்க தனி அடையாள எண் உருவாக்கப்பட்டது.மாணவர்களின் ஆதார் எண், ரத்தப்பிரிவு, பெற்றோர் பெயர், வருமான விபரம், முகவரி, புகைப்படம், மொபைல்போன் எண் போன்ற விபரங்கள், இதில் சேகரிக்கப்பட்டன. இதற்கான தொழில்நுட்ப பணிகளை, அண்ணா பல்கலையுடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டது. திடீரென, அண்ணா பல்கலையின் தொழில்நுட்ப உதவியை நிறுத்தி, இணைய தள பராமரிப்பு, தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:'எமிஸ்' தகவல் அமைப்பில், மாணவர்களின் சுயவிபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை மட்டுமே, வரும் ஆண்டுகளில், பொதுத் தேர்வு மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கு, பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர் விபரங்களை சேகரிக்கும் இணையதள பராமரிப்பு பணிகளை, தனியார் நிறுவனத்திடம், பள்ளிக்கல்வித் துறை வழங்கி உள்ளது.அதனால், தமிழக மாணவர்களின் ஆதார், பிறந்த தேதி, வங்கி கணக்கு எண், பள்ளிகளின் அலுவலக தகவல்கள் உள்ளிட்ட சுய விபரங்கள் வெளியே கசியும் ஆபத்து உள்ளது.நிர்வாக ரீதியாக ரகசியங்களை காக்க, மத்திய அரசின், தேசிய தகவல் மையம் வழியாக மட்டுமே, அரசு துறை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.தமிழகத்தில், 'எல்காட்' மூலம் நேரடியாக, இணையதள பராமரிப்பை மேற்கொள்ளலாம். இதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்