Breaking News

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தடையை மீறி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்



போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இரண்டாவதாக நாளாக வெள்ளிக்கிழமை (செப்.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 75,000 ஊழியர்கள் பங்கேற்றதாக, சில அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்த விவரம்:- 
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும்; 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 7 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்தது. 
இதையடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் 60 சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள், தங்களது போராட்டத்தை அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிவரை ஒத்திவைத்துள்ளனர். 
அனைத்து மாவட்டங்களிலும்... எனினும், 17 சங்கங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வியாழக்கிழமை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தலைமைச் செயலரும் அறிவுறுத்தியிருத்தியிருந்தார்.
இரண்டாவது நாளாக நீதிமன்றத்தின் தடையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர், தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (செப்.8) பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சென்னை எழிலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்டப் போராட்டம், நடவடிக்கை குறித்து சனிக்கிழமை (செப்.9) முடிவு செய்யவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்நிலைக் குழு உறுப்பினர் பக்தவத்சலம் தெரிவித்தார். 
75,000 பேர் பங்கேற்பு: இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 7-ஆம் தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் யார் யார் என்பது பற்றி துறைத் தலைவர்களிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை 11 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுபற்றி அரசுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஆசிரியர் பிரிவில் சுமார் 36 ஆயிரம் பேரும், அரசு ஊழியர்கள் பிரிவில் சுமார் 39 ஆயிரம் பேருமாக மொத்தம் 75 ஆயிரம் பேர் வெள்ளிக்கிழமை (செப்.8) அலுவகங்களுக்கும், பள்ளிகளுக்கும் வரவில்லை. 
இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கெனவே அரசு விதிகள் உள்ளன என்று தெரிவித்தார்.