Breaking News

மாவட்டத்தில் இட நிரவல் கூட்டம் ஆசிரியர்கள் கலந்தாய்வில் குளறுபடி மாவட்ட கல்வி அதிகாரியை முற்றுகை


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்களை  நியமிப்பதில் குளறுபடி ஏற்படுவதாக கூறி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியை ஆசிரியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவில் பணி இட நிரவல் கலந்தாய்வு கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் சுப்புராயமுதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.மாட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளிகளில் 61 மாணவ, மாணவியர்கள் இருந்தால் 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று அரசாணை விதி உள்ளது.

ஆனால் 61 மாணவ, மாணவிகள் இருந்தால் 3 ஆசிரியர்களை நியமிக்க முடியாது என கல்வி துறை மறுக்கின்றது என்று கூறி பணி நிரவல் கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர், ஆசிரியைகள் மாவட்ட  தொடக்க கல்வி அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ஒரு சில ஒன்றியங்களில் ஆசிரியர்களை கேட்காமலேயே பணி நிரப்பப்படுகிறது என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் 61 மாணவ, மாணவியர்களுக்கு கீழ் ஒரு மாணவர் குறைந்தால் கூட 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டி இடத்தில் ஒரு ஆசிரியரை மாற்றி விடுகின்றனர். தனால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


75 மாணவ, மாணவியர்கள் இருந்தால்தான் 3 ஆசிரியர்களை நியமிப்போம் என்று அரசு தெரிவித்துள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஆசிரியர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். கலந்தாய்வு முறையாக நடக்கவில்லை என்று கூறி அதிருப்தி அடைந்த ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை முற்றுகையிட்டனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்வி அதிகாரியிடமும், ஆசிரியர்களிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து ஒரு வழியாக 70 மாணவர்கள் இருந்தால் 3 ஆசிரியர்களை நியமிக்கலாம்  என்று கூறியதன் பேரில் இருதரப்பினருக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டதாக தெரிகிறது.  

இது பற்றி பெயர் கூற விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “பணி நிரவல் கலந்தாய்வு முறையாக நடக்கவில்லை. அரசின் உத்தரவுகளை கடைபிடிப்பதில் அதிகாரிகள் இருக்கிறார்களே தவிர, ஆசிரியர்களின் நிலைகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.  குறிப்பாக, ஆசிரியர்களின் உடல் நிலை போன்றவற்றை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.  ஆகவே கலந்தாய்வு என்பது முறையாகவும், சரியாகவும் நடைபெறவேண்டும். பல்வேறு குளறுபடிகளை வைத்துக் கொண்டு கலந்தாய்வை நடத்த தேவையில்லை” என்றார்.