Breaking News

புதிய கல்விக் கொள்கை: மாநில உரிமைகளைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் : தமிழக அரசு உறுதி


புதிய கல்விக் கொள்கையில், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப் பேரவையில் அமைச்சர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பேசியது:-

புதிய கல்விக் கொள்கை குறித்த வரையறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


இதுவரை கல்வியாளர்கள் தயாரித்த நிலை மாறியுள்ளது. இந்த முறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஒரு கல்வியாளர் கொண்ட குழுவும் தயாரித்த அறிக்கை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கொள்கை மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என்றார்.

“சம்ஸ்கிருதம், ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்’ அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குறுக்கிட்டுப் பேசியது:-

புதிய கல்விக் கொள்கையின் சில உள்ளீடுகளை மட்டுமே மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. மாநில அரசின் கருத்தும் கேட்டுள்ளது. இதற்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழக அரசு பதில் அனுப்பும்.

மாநிலத்தின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும். மொழி, கலாசாரத் தன்மைகள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

தமிழகத்தில் சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழியைத் திணிக்க எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம். சிறுபான்மையினர் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றார்.

இதேபோல், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பா.பென்ஜமினும், “சம்ஸ்கிருதம், ஹிந்தியை திணிக்க அனுமதிக்க மாட்டோம். மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும்’ என்றார்.

மு.க.ஸ்டாலின்: புதிய கல்விக் கொள்கையில் மாநில உரிமைகளைப் பறிக்க விடமாட்டோம். சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர்கள் உறுதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்ற வேண்டும்.

தங்கம் தென்னரசு: புதிய கல்விக் கொள்கை மூலம் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இது நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதிக்கும். எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது. இதனை புதிய கல்விக் கொள்கை அனுமதிக்கவில்லை. தொடர்ச்சியாகத் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும் என்றும் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இது குலக்கல்வியை அறிமுகப்படுத்துவதாகும். எனவே, புதிய கல்விக் கொள்கையை அரசு ஏற்கக் கூடாது.