'புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கு முன் நோட்டீஸ் வழங்கினோம்; நடவடிக்கை எடுக்காத அரசு, போராட்டத்திற்கு தள்ளிவிட்டது' என
அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.
>
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் 61 சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. 'புது ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இருபது சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்' போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.
அரசு
ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வம் கூறியதாவது: வேலைநிறுத்தம் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே அரசுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது; நேற்று வரை, ஊழியர்களிடம் அரசு பேசவில்லை. போராட்டத்தில் ஊழியர்களை தள்ளியுள்ளது. இன்றும், நாளையும் தாலுகா அளவில் ஆர்ப்பாட்டமும், ஏப்., 27, 28 ல் தலைநகரங்களில் மறியலும், ஏப்., 29, மே 1ல் போராட்ட எழுச்சி கூட்டங்களும், மே 2 முதல் மாநில நிர்வாகிகள் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதமும், மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டமும் நடக்கும். அரசு உடனடியாக நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். இவ்வாறு கூறினார்.
வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலர் முருகையன் கூறியதாவது: வருவாய்த்துறையில் உதவியாளர் முதல் தாசில்தார் வரை, 12 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர்; தாலுகா அலுவலகங்கள் செயல்படாது. இதனால் சான்றிதழ்கள் வழங்குவது உட்பட பணிகள் பாதிக்கும். இவ்வாறு கூறினார்.