மாணவர்களின் சிறந்த கணினி மென்பொருள்களுக்கு
முதல்வர் விருதும், பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. இதற்காக
செப்.11-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி
தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
செல்லிடப்பேசியின் புதிய பயன்பாடுகள்-ஜிஐஎஸ்
தொழில்நுட்பம், பொது சுகாதாரம்- பள்ளிக் கல்வி, மாற்றுத்திறனாளிகள், இதர
சமூகப் பிரிவு உள்ளிட்ட துறைகளில் சிறந்த, பயனுள்ள மென்பொருள் படைப்புகள்
விருதுக்கு கோரப்பட்டுள்ளன.
தகுதி: சிறந்த கணினி படைப்புகளை அனுப்புவதற்கு
அரசு, அரசு உதவிபெறும் தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முழுநேர
பட்டயம், பட்டம், முதுநிலை, முனைவர் பிரிவுகளில் பயின்றுவரும் மாணவர்கள்
இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாவட்ட அளவிலான விருது: சென்னை மாவட்டத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சிறந்த மென்பொருள் படைப்புகளுக்கு முதல் பரிசு
ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,500, மூன்றாம் பரிசு ரூ.5,000 என
வழங்கப்படும்.
இந்த மூன்று பரிசுகளில் முதல் பரிசு பெறுவோர் மாநில அளவில் போட்டியிட அனுமதிக்கப்படுவர்.
மாநில விருது: தமிழகத்தில் உள்ள அனைத்து
மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மென்பொருள் படைப்புகளில்
முதல் மூன்று படைப்புகளுக்கு முதலமைச்சர் விருதும், பரிசுத் தொகையும்
வழங்கப்பட உள்ளது.
இதில், முதல் பரிசு பெறும் திட்டத்திற்கு
ரூ.2,50,000-ம், இரண்டாம் பரிசு ரூ.2 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1,50,000
என வழங்கப்படும். மேலும், பரிசுத் தொகையோடு அணியில் உள்ள அனைவருக்கும்
கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதன்படி, ஒவ்வொரு கல்லூரியும், புதிய
மென்பொருள் தயாரிப்பதற்கு குறிப்பிட்ட பிரிவில் 4 முதல் 8 பேர் கொண்ட
குழுவை அமைத்துக் கொள்ளலாம்.
மேலும், கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட
சிறந்த படைப்புகளைக் கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்று, "கணினி
மென்பொருள்களுக்கான முதலமைச்சர் விருது' என்று குறிப்பிட்டு செப்.11-க்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.
இதற்கான, விண்ணப்பத்தை www.chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.