சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 2ம் தேதி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர், துரைபாண்டி நேற்று கூறியதாவது:
மத்திய அரசின் புதிய கொள்கைகள், அரசு ஊழியர்களுக்கு எதிராக உள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்காக, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதனால், பல லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, 4, 5வது ஊதியக் குழுக்கள் மூலம், 40 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில், '6வது ஊதியக் குழு மூலம், 15.79 சதவீத ஊதிய உயர்வே வழங்கப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளதை ஏற்க முடியாது. இதேபோல், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 2ம் தேதி, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். தமிழகத்தில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 20 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்பர். நாடு முழுவதும், 20 கோடி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். மத்தியில், ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.,வின், பி.எம்.எஸ்., காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கங்களும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.