Breaking News

இப்படியும் ஒரு தலைமையாசிரியர்-

பள்ளி பராமரிப்புக்கும், மாணவர்கள் நலனுக்காகவும் அரசு ஒதுக்கும் நிதியை தன் குடும்ப செலவிற்கு பயன்னடுத்திக் கொண்டு வெற்று பில்களை கடையில் வாங்கி பொய் கணக்கெழுதும் பல தலைமையாசிரியர்கள் மத்தியில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை  மாணவர்கள் நலனுக்காக செலவிட்டு,பள்ளியை தன் வீடாகவும் மாணவர்களை தன் பிள்ளைகளாகவும் நினைத்து பணிபுரியும் இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

மதுரை மாவட்டம், அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி. வழக்கமாய் மாலை வகுப்புகள் முடிந்ததும், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும், அவரவர் வீட்டிற்கு கிளம்பிச் செல்கின்றனர்.
ஆனால், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கில்பர்ட் வயது 47.
இவர் மட்டும் அதற்கு பின், வகுப்பறைகள், பள்ளி வளாகம் போன்றவற்றை, குப்பைகள் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு, கூடுதலாக பள்ளியின் கழிப்பறைகளையும் சுத்தம் செய்துவிட்டே செல்கிறார்.
இதன் மூலம், மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவர்களை, பள்ளி வளாகம் சுத்தத்துடனும், சகாதாரத்துடனும் வரவேற்கிறது.
சுத்தமின்றி பல அரசு பள்ளிகள் இருக்கும் போது, இவரது பள்ளி மட்டும் எப்படி இவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது, பலருக்கு ஆச்சரியம். இதற்கு காரணம், தலைமை ஆசிரியரான கில்பர்ட்தான் என்பதே பலருக்கும் தெரியாது; அது தெரியவும் வேண்டாம் என்கிறார் கில்பர்ட்.
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவரான கில்பர்ட், என்ன படிப்பது, எப்படி வாழ்க்கையை கொண்டு செல்வது என்பது தெரியாமல் இருந்தபோது, முன்பின் தெரியாத பாதர் லூர்துசாமி என்பவர், எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இவருக்கு செய்த உதவியே, இவரை ஆசிரியராக்கியது.
முன்பின் தெரியாத தனக்கு, எப்படி ஒருவர் உதவினாரோ, அதே போல, நாமும் முன்பின் தெரியாத பலரது முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதே போல, சமூகத்திற்கு பயன்படும்படியாக வாழ வேண்டும் என்று வழிகாட்டிய பெரிய காமன், செல்லத்துரை, ராமச்சந்திரன், பாண்டி, சிவ.பாண்டியன் ஆகியோரின் வழிகாட்டுதலும் இவரை மென்மையும், மேன்மையும் படுத்தியது.
தன் சம்பளத்தில் ஒரு பங்கை ஒதுக்கி, பொருளாதாரம் காரணமாக, பள்ளியில் படிக்க முடியாமல் நின்ற குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை, செலவு செய்து படிக்க வைக்கிறார்.
பள்ளி வளாகத்தில், மிட்டாய் விற்கும் மூதாட்டியின் குழந்தைகள் உட்பட, வறுமையான குடும்பத்து குழந்தைகளின் மொத்த படிப்புச் செலவையும் ஏற்று, படிக்க வைக்கிறார்.
இவரை பொறுத்தவரை, எந்த குழந்தையுமே படிக்காமல் இருக்கக் கூடாது. தொடர்ந்து மூன்று நாள் ஒரு மாணவன் வகுப்பிற்கு வராவிட்டால், அந்த மாணவனுக்கு என்ன ஆச்சோ என்று, வீட்டிற்கு தேடிப்போய் பார்த்து, சம்பந்தப்பட்ட மாணவனின் பிரச்னையை தீர்த்து, வகுப்பிற்கு தொடர்ந்து வரும்படி பார்த்துக் கொள்வார்.
எப்போதுமே வீட்டில் இருந்து, தனக்கு போக, மேலும் இரண்டு பேருக்கு சாப்பாடு கொண்டு வருவார். அவசரத்தில் சாப்பாடு கொண்டு வராமல் வந்துவிடும் பிள்ளைகளுக்கு, கொண்டுவந்த கூடுதல் சாப்பாடை கொடுத்து விடுவார். தன்னிடம் கூடுதலாக ஒரு நூறு ரூபாய் இருந்தால் கூட போதும், உடனே, அந்த நூறு ரூபாய்க்கு மிக்சர் போன்ற நொறுக்குத் தீனி வாங்கிவரச் செய்து, குழந்தைகளிடம் வழங்கி மகிழ்ச்சியடைவார்.
இவரது வீட்டிற்கு உறவினர்கள் வாங்கிவரும் இனிப்பு, காரத்தைக் கூட பள்ளிக்கு கொண்டுவந்து பகிர்ந்து கொள்வார். விசேஷ நாட்களில், வீட்டில் செய்யும் விசேஷ உணவுகளும், பள்ளி குழந்தைகளுக்குதான்.
வெறும் உணவு மட்டுமின்றி, அவ்வப்போது ஜாமென்ட்ரி பாக்ஸ், பேனா, ஸ்கூல் பேக் போன்றவற்றையும் வாங்கி கொடுத்து, மாணவர்களை உற்சாகப்படுத்துவார். மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளார்.
இவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்த போது, தனக்கு ஏதாவது ஒரு சின்ன கிராமத்தில் வேலை கிடைத்தால் சேவை செய்ய முடியுமே என்று வேண்டிக் கொண்டார். அதன்படி கிடைத்த கம்மாளபட்டி என்ற கிராம பள்ளிக்குத்தான் வேலைக்கு சென்றார். அப்போது இருந்து இப்போது தலைமை ஆசிரியராக இருக்கும் இந்த பள்ளிவரை, இவர் விரும்பியபடியே கிராமத்து பள்ளியாகவே அமைந்து விட்டது.
"பள்ளிக்கூடத்திற்கு வந்துட்டா, அவங்கெல்லாம் நம்ம பிள்ளைங்க. நம்ம பிள்ளைங்க இருக்கிற இந்த இடத்தை, கோவில் மாதிரி வைச்சுக்கணும்...'ன்னு சக ஆசிரியர்களிடம் சொல்லி, அவர்களது ஒத்துழைப்போடு பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறார்.
எல்லாம் சரி, "கழிப்பறையை சுத்தம் செய்வது என்பதை, ஒரு சிலர் கேலியாக நினைப்பார்களே?' என்று கேட்ட போது, "யார் கேலியாக நினைத்தால் எனக்கென்ன, என் மனசு சொல்கிறது, நான் செய்வது சரிதான் என்று. இதில் எந்த தயக்கமும் கிடையாது. மாறாக, நிறைய மனத்திருப்தி தான் உண்டாகிறது...' என்கிறார் சாந்தமாக.
"பள்ளிக்குழந்தைகளின் பிரார்த்தனையால்தான், நான் ஒரு சோதனையில் இருந்து மீண்டேன். ஆகவே, அவர்களது கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்னையில், கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்கிறேன்...' என்றவர், "தனக்கு எவ்வித விளம்பரமும் வேண்டாம். இலைகளையும், கிளைகளையும், பழங்களையும் தரும் விதை, எங்காவது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதா! அந்த விதை போல இருக்க விரும்புகிறேன்...' என்று கூச்சமும், கும்பிடுமாக கூறி, விடை கொடுத்தார்.