இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு
இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு
ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள்
மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த, 2013-14 முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக்குகளில்,
முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது.
கடந்த, 2011-12ல், 9 லட்சம் பேர்; 2012-13ல், 7 லட்சம் பேர்; 2013-14ல், 5
லட்சம் பேருக்கு,இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. கடந்த நிதியாண்டு, 6 லட்சம்
பேருக்கும், நடப்பாண்டு, 6 லட்சம் பேருக்கும், இலவச லேப்டாப் வழங்க, இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு, 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்நிதியில், தமிழ்நாடு மின்னணு நிறுவனமான,
'எல்காட்' மூலம், லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ, மாணவியருக்கு
வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் அதிகாரிகளிடம், ''இலவச லேப்டாப்
வழங்கும் திட்ட இலக்குபடி, டிசம்பருக்குள், அனைவருக்கும் லேப்டாப் வழங்க
வேண்டும்,'' என்றார்.