Breaking News

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்விக்கு விதித்துள்ள தடையினை நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி





சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைதூரக் கல்வித்துறைக்கு பல்கலைக்கழக மானியக்குழு விதித்துள்ள தடையினை ரத்து செய்திட வேண்டும் என் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் டி.கே.ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மத்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, மனிதவளத்துறையில் உயர்கல்வித்துறை செயலாளர் வி.ஓபேராய் ஆகியோரை கடந்த வெள்ளிக்கிழமை (21.8.2015) மாலை புதுதில்லியில் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

வழக்கம் போல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியினை தொடர்ந்திட அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினார்கள். இதுகுறித்து
கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாமலைப் பல்கலைக்கழக அதிகார எல்லை பரப்பை  மீறிவிட்டதாக பல்கலைக்கழக மானியக்குழு தொலைதூர கல்விக்கு தடை விதித்துள்ளது.
இது தவறான நடைமுறை என சுட்டிக்காட்டியுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிலுள்ள இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும். 1928-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி செயல்பட்டு வரும் அரசு பல்கலைக்கழகமாகும். 2013-ம் ஆண்டில் மீண்டும் புதிய சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டங்களுக்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இச்சட்டங்களின்படி, பல்கலைக்கழகம் இந்தியாவிலும், அந்நிய நாடுகளிலும் தொலைதூரக்கல்வி மையங்களை நடத்திட வகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் உள்ள உரிமையை யு.ஜி.சி-யின் (பல்கலைக்கழக மானியக்குழு) விதியை காட்டி மறுப்பது நியாயமற்றதாகும். மேலும் யு.ஜி.சி 2012ம் ஆண்டு இத்தகைய தடையாணையை விதித்த போது அத்தடையாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து யு.ஜி.சி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மேலும் உயர்நீதிமன்றம் தடையாணை எதுவும் வழங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தற்போது யு.ஜி.சி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்துவதாக உள்ளது.
சமீபத்தில் மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் சம்பந்தமான வழக்கில்,  பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகள் வழிகாட்டு நெறிகளே தவிர அவைகள் கட்டுப்படுத்தக்கூடியவை அல்ல என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி துறையின் மூலம் தற்போது 4 லட்சம் மாணவர்கள் பல துறைகளில் கல்வி பயின்று வருகிறார்கள். தங்கள் வாழ்விடத்தில் இருந்து கொண்டே உயர்கல்வி பெறுவதற்கு பெரும் வாயப்பாக தொலைதூரக்கல்வி அமைந்துள்ளது.
மாணவர்கள் தங்கள் வாழ்விடத்திலிருந்து தாங்கள் விரும்புகிற பாடப்பிரிவினை வழங்கும் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெறுவதற்கு உரிமை பெற்றவர்களாவார்கள். தற்போதைய யு.ஜி.சி.யின் உத்தரவு நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
இத்துறையில் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 4000-க்கும் அதிகமான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். யு.ஜி.சி. நடவடிக்கையால் இவர்களது குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாவது மட்டுமன்றி ஏற்கனவே கடுமையான நிதிநெருக்கடியில் தவித்துக் கொண்டுள்ள அண்ணாமலைப்பல்கலைக்கழம் யு.ஜி.சி நடவடிக்கையால் ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என விளக்கியதோடு யு.ஜி.சி-யின் உத்தரவினை ரத்து செய்திட வேண்டுமென வற்புறுத்தினோம். அமைச்சர், உயர்கல்வி செயலாளர் தங்களது கோரிக்கை குறித்து கவனமாக பரிசீலித்து உரிய முடிவு மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாக கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.