திண்டுக்கல்:பணப்பலன் காரணமாக தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்களை பதவி இறக்கம் செய்ய வேண்டுமென,
தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
ரூ.4,500 ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தரஊதியம் ரூ.4,600 ம்,
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு
ரூ.4,700 ம் வழங்கப்படுகிறது.
ஊதிய முரண்பாட்டை களைய 2011 ல் அமைக்கப்பட்ட ஒருநபர் குழு 2009 மே 31
க்குள் 10 ஆண்டுகள் பணிபுரிந்து தேர்வுநிலை பெற்ற தொடக்கப் பள்ளி
ஆசிரியர்களுக்கான தர ஊதியத்தை ரூ.5,400 ஆக உயர்த்தியது. இந்த தர ஊதியம்
நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் தர ஊதியத்தை விட அதிகமாக உள்ளது.
இதனால் 2009 மே 31 முன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு
பெற்ற 100க்கும் மேற்பட்டோர், தங்களை தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர்களாக
பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம்
செய்துள்ளனர். அவர்களை பதவி இறக்கம் செய்ய தொடக்கக் கல்வித்துறை
மறுத்துள்ளது.
பாதிக்கப்பட்டோர் கூறியதாவது:
மேல் பதவியை விட கீழ் பதவிக்கு ஊதியத்தை உயர்த்தியது கேலி கூத்தாக
உள்ளது. எங்களுக்கு பணப்பலன் பாதிக்கும் என்பதால் பதவி இறக்கம் செய்ய
கேட்டுள்ளோம். நிதித்துறையின் விதிப்படி பதவிஇறக்கம் செய்ய வழிவகை உள்ளது.
இதை கருத்தில் கொள்ளாமல் கல்வித்துறை அதிகாரிகள் பிடிவாதம் காட்டுகின்றனர்,
என்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மேல் பதவிகளில் 3
ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் கீழ் பதவிக்கு வரமுடியாது,” என்றார்.