தமிழகம் முழுவதும், சத்துணவு
மையங்களுக்கு, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களே நேரடியாக முட்டை வினியோகம்
செய்யும் திட்டம், இந்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. எடை குறைவாக
இருந்தாலோ, புல்லட் முட்டையாக இருந்தாலோ, அவற்றை திருப்பி கொடுத்து விட
வேண்டும். அவ்வாறான முட்டைகள், பள்ளியில் வழங்கப்பட்டால் அமைப்பாளர் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
முட்டை கொள்முதலை பொறுத்தமட்டில்,
சென்னையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் மாநில அளவிலான டெண்டர்
விடப்படுகிறது. இதில், பல்வேறு மாவட்ட கோழிப் பண்ணையாளர்களும் பங்கேற்பர்.
மாவட்ட வாரியாக டெண்டர் எடுத்தோர், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், அந்தந்த
ஒன்றிய அலுவலகத்துக்கு முட்டையை அனுப்பி விட வேண்டும். அமைப்பாளர்கள்
ஒவ்வொருவரும் ஒன்றிய அலுவலகம் சென்று, முட்டையை வாங்கிக்கொண்டு மையத்துக்கு
செல்ல வேண்டும். சத்துணவு முட்டையானது, தலா, 46 முதல், 52 கிராம் வரை
இருக்க வேண்டும். 12 முட்டைகளை ஒரே சமயத்தில் எடை போட்டால், 552 கிராம்
இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில், சத்துணவு முட்டையில்
பல்வேறு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அரசு மீது எதிர்கட்சிகள்
குற்றம் சாட்டி வருகின்றன. இதனால், முட்டை வினியோகத்தை நேரடியாக
பண்ணையாளர்களே செய்வதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த வாரம்
முதல் இம்முறை அமலுக்கு வருகிறது.
முட்டை வாங்கும்போது, அதன் எடை
சரியாக உள்ளதா, சிறிய அளவிலான முட்டை உள்ளதா? என்பதை கவனித்து வாங்கினால்
போதும். முட்டையில் குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட பி.டி.ஓ.,விடம்
தெரிவிக்கலாம். இதுகுறித்து, சத்துணவு பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில்,
‘’பள்ளிகளுக்கு நேரடியாக முட்டை சப்ளை செய்யும் திட்டம் இந்த வாரம்
அமல்படுத்தப்படுகிறது. ஒரு முட்டைக்கு, 15 காசு வீதம் போக்குவரத்து
கட்டணத்தை அரசு வழங்குகிறது. அமைப்பாளர்களுக்கு இது பற்றிய தகவல் விரைவில்
அறிவிக்கப்படும். சிவில் சப்ளைஸ் எவ்வாறு பொருள் வழங்குகின்றனரோ அதுபோல்,
முட்டை இனி சத்துணவு மையத்துக்கு வந்து சேரும். அவை சரியான எடையில் உள்ளதா,
சிறிய முட்டையாக உள்ளதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். தவறுதலாக வரும்
பட்சத்தில் பி.டி.ஓ.,விடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கு முன்,
பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து வாங்கி வரும்போது, முட்டை சேதமாகும் நிலை
ஏற்பட்டது. இதனால் அமைப்பாளர்கள் அவித்த முட்டைக்கு பதிலாக ஆம்லெட்
போடவேண்டிய நிலை இருந்தது. இனி, அந்த நிலை இருக்காது. திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ள 1523 மையங்களுக்கும் இவ்வாறு நேரடியாக முட்டை சப்ளை
செய்யப்படும்’’ என்றார்.