Breaking News

ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு: ஆகஸ்ட் 9, 16 தேதிகளில் நடைபெறும்; யு.பி.எஸ்.சி. அறிவிப்பு

ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வுக்கான தேர்வு (நிலை 1) ஆகஸ்ட் 9, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தத் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:

"பி' (அரசு இதழில் பதிவு பெறாத) மற்றும் "சி' (தொழில் சாரா) பிரிவுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மத்திய செயலக சேவை, ஆயுதப்படை தலைமைச் செயலகம், ரயில்வே அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றில் உதவியாளராக அல்லது அஞ்சல் துறையின் ஆய்வாளர், கணக்குத் தணிக்கையாளர், கணக்காளர், இளநிலை கணக்காளர், வரித் துறையில் உதவியாளர் போன்ற பணிகளில் பணிபுரியலாம்.


தெற்கு மண்டலத்தில் சுமார் 4 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்தத் தேர்வு 12 நகரங்களில், 236 மையங்களில் நடைபெறவுள்ளது. 
ஆகஸ்ட் 9, 16 ஆகிய தேதிகளில் இரண்டு பிரிவுகளில் (காலை 10 மணி முதல் 12 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை) இந்தத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வுக்குத் தகுதியான நபர்களுக்கு அனுமதிச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அனுமதிச் சீட்டை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.sscsr.gov.in) இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான http://www.sscsr.gov.in/CGL2015-TIER-AC-GET.htm என்ற இணைய வழியில் அனுமதிச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காலையில் தேர்வு எழுதுவோர் தேர்வு மையத்தில் காலை 9 மணி அளவில் இருக்க வேண்டும். தேர்வு மையத்தின் நுழைவாயில் காலை 9.30 மணிக்கு மூடப்படும். மதியம் தேர்வு எழுதுவோர் பகல் 1 மணிக்கு முன்பு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு மையத்தின் நுழைவாயில் பகல் 1.30 மணிக்கு மூடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.