தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக
பணியாற்றிவருவதாக தகவல் தெரிவிக்கின்றது.அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும்
மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க
பள்ளிக் கல்வித்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
பல
இடங்களில் தமிழ் வழி கல்வி மட்டுமின்றி ஆங்கில வழி கல்வி பாடத் திட்டமும்
செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு
ஆண்டு குறைகிறது.மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் தொடக்க கல்வி துறையில்
ஆசிரியர் நியமனமும்கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு இன்று முதல்
தொடங்குகிறது. பல்வேறு கட்டங்களாக இந்த மாதம் இறுதி வரை கலந்தாய்வு
நடைபெறுகிறது. கலந்தாய்வு நடத்துவதற்கு முன்னதாக காலிப்பணியிடங்கள்
கணக்கெடுக்கப்பட்டன.அதில் கடந்த ஆண்டை விட மிக குறைந்த அளவில் தான்
ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதும் தெரிய வந்தது.இதற்கிடையில் ஆசிரியர் –
மாணவர் விகிதாச்சார முறையில் கணக்கெடுக்கும் பணியும் கடந்த 1–ந்தேதி முதல்
தொடங்கி நடந்து வருகிறது.
1–8.2015–ன்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் எத்தனை பேர் வகுப்பு
வாரியாக, பாட வாரியாக பணியாற்றுகிறார்கள், மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு
உள்ளது என்பதை தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும், முதன்மை
கல்வி அதிகாரிகளிடமும் வழங்கி வருகின்றனர்.இதுவரையில் 3 ஆயிரம் ஆசிரியர்கள்
மாணவர்கள் விகிதாச்சாரத்தை விட கூடுதலாக இருப்பதாக கல்வித்துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாவட்டம் வாரியாகஉபரி ஆசிரியர்கள்
பட்டியல் கணக்கெடுக்கப்படுகிறது.பல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள்தான்
மாணவர்கள் விகிதாச்சாரத்தை விட கூடுதலாக உள்ளனர். இதனால் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு இடமாறுதல் அளிப்பது பள்ளிகல்வித்துறைக்கு பெரும் சிரமத்தை
ஏற்படுத்தி உள்ளது.
முதலில் உபரி ஆசிரியர்களை மாவட்டத்திற்குள் பணி நிரவல் செய்யவும்
அதற்கும் மேலாக இந்த எண்ணிக்கை இருந்தால் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு
மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆகையால் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு பணி நிரவல், முடிந்த பிறகு தான் இட மாறுதல் கலந்தாய்வு
நடைபெற வாய்ப்பு உள்ளது. அதுவும் மிகப்பெரிய அளவில் இட மாறுதல் கலந்தாய்வு
இருக்காது என்றே கூறப்படுகிறது.