உளுந்தூர்பேட்டை அருகே பள்ளியில் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை
கண்டித்தும், புதிய ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர
வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியம், செம்மணந்தல்
கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தலைமையாசிரியர் உள்பட 9 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர்.
பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர், உதவி ஆசிரியருக்கு
இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியர்களுக்கு இடையே தகராறு
ஏற்பட்டது.
இதையறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செல்வராஜ் ஒரு வாரத்துக்கு
முன்பு பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடமும், மாணவ, மாணவிகள்
மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி, அதன்பேரில் 9
ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதைக் கண்டித்தும், புதிய ஆசிரியர்களை பணியில் விரைந்து சேர
வலியுறுத்தியும் பள்ளியிலுள்ள நாற்காலிகள், பெஞ்சுகள்,
மேஜைகளை தூக்கிப் போட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் செல்வராஜ்,
பழனிமுத்து மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து
மாணவர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பள்ளிக்கு புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதாகவும்,
அதுவரை தாற்காலிக ஆசிரியர்கள் 6 பேரை நியமிப்பதாகவும்
அதிகாரிகள்உறுதியளித்து மாணவர்களின் போராட்டத்தை கைவிடச்
செய்தனர்