Breaking News

செப்டம்பர் 23இல் சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தையல், ஓவியம், இசை, 
உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கு 1,325 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்கள் முதல்முறையாகப் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்த தகவல்களைத் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான டி.ஜெகன்நாதன் வெளியிட்டுள்ளார். “சிறப்பாசிரியர் போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடந்தது. சிறப்பாசிரியர் தேர்வுக்கு 37,900 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெறும். தேர்வு முறையில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 95 இடம்பெறும். 2.30 மணி நேரம் தேர்வு நடக்கும். தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் 40% எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.