Breaking News

போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை


செமஸ்டர் தேர்வுக்கு முன், பல கல்லுாரி களில் மாதிரித் தேர்வு துவங்கி உள்ளது; சில கல்லுாரிகளில், நாளை துவங்குகிறது. மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான போராட்டம், 'பஸ் டே', கல்லுாரி மாணவர்களிடையே மோதல், பஸ்சில் தகராறு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்கள், செமஸ்டர் தேர்வு எழுத, கல்லுாரி கல்வி இயக்ககம் தடை விதித்துள்ளது. 

இதுகுறித்து, அனைத்து கல்லுாரி முதல்வர்களுக்கும், மண்டல இணை இயக்குனர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
'சென்னை, மாநில கல்லுாரியில் நேற்று முன்தினம் ரகளை செய்த மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்குவது குறித்து, கல்லுாரி முதல்வர் பிரேமானந்த பெருமாளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும் முடிவு எடுக்கப்படும்' என, கல்லுாரி கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.
சென்னை, பச்சையப்பன் கல்லுாரியில், இதுவரை, ஐந்து மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, டி.சி., எனப்படும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் கஜவரதன் கூறும்போது, ''போலீசார் வழக்குப் பதிவு செய்த மாணவர்களிடம், கல்லுாரி ஆசிரியர்கள் மூலம் விசாரணை நடத்தி, தவறு செய்த மாணவர்களை மட்டும் கல்லுாரியை விட்டு நீக்கியுள்ளோம். முதலாம் ஆண்டைச் சேர்ந்த, ஐந்து பேர் நீக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.அதேபோல், நந்தனம் கல்லுாரி, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லுாரியிலும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.'வேலை நாட்களில், 75 சதவீத நாட்கள் கல்லுாரிக்கு வந்தவர்களுக்கு மட்டுமே செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்' என, கல்லுாரி கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.