Breaking News

10 ஆயிரம் அரசு பள்ளிகளில் கழிவறை கட்டப்படுகிறது; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்பாடு

தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொண்டுவந்துள்ளார். பாடத்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்ற ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்களின் சீருடைகளின் நிறத்தை மாற்றவும் ஏற்பாடு செய்துள்ளார்.

அதாவது 1–வது வகுப்பு முதல் 5–வது வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு ஒரே வண்ணத்தில் சீருடைகளும், 6–வது வகுப்பு முதல் 10–வது வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு மற்றொரு வண்ணத்தில் சீருடைகளும், பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு வேறொரு வண்ணத்தில் சீருடைகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த சீருடைகளின் வண்ணங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தேர்ந்து எடுத்தனர். வண்ணம் மாற்றப்பட்ட பிறகு சீருடைகள் வருகிற கல்வி ஆண்டில் வழங்கப்பட உள்ளன.
அடையாளம் தெரியும்
இந்த சீருடைகளின் மூலம், மாணவ–மாணவிகள் தொடக்கப்பள்ளிகளை சேர்ந்தவர்களா?, நடுநிலைப்பள்ளி அல்லது உயர்நிலைப்பள்ளியை சேர்ந்தவர்களா? அல்லது மேல்நிலைப்பள்ளியை சேர்ந்தவர்களா? என்று அடையாளத்தை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் பள்ளிகளில் மாணவ–மாணவிகளின் நலன் கருதி கழிவறை கட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த கழிவறைகளை தொழில் நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், முன்னாள் மாணவர்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவை சேர்ந்து கட்ட உள்ளன.
கழிவறை கட்டுவது தொடர்பாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொழில் அதிபர்களை சந்திக்க உள்ளார். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 3 ஆயிரம் கம்பெனிகள் சார்பில் 500 கழிவறைகளை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் மாணவ–மாணவிகளின் நலன் கருதி தமிழகத்தில் 10 ஆயிரம் அரசு பள்ளிகளில் கழிவறைகளை கட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்பாடு செய்துள்ளார்.