'தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நாற்று நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு கன்றுகள் வளர்ந்துள்ளன. தோட்டக்கலைத் துறையினர் மழைக் காலம் மற்றும் சீசன் முடிந்த பின், நாற்றுகளை விவசாயிகளிடம் கொடுக்கின்றனர். அதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.
பள்ளிகளில் பழத்தோட்டம் : இந்த நிலையில், தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்தாண்டு பழக்கன்றுகளையும், நிழல் தரும் மரக்கன்றுகளையும் அதிகளவு நட வேண்டும். விவசாயிகளிடம் முன்கூட்டியே எவ்வளவு கன்றுகள் தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கன்றுகளை மழைக்காலம் துவங்குவதற்குள் வழங்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளில், பழத்தோட்டம், மூலிகை பண்ணை அமைப்பது; நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதற்கு தலைமை ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவியர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.