தமிழகத்தில் உள்ள 350 பழங்குடியினர் பள்ளிகள், விடுதிகளில் ரூ.1.54 கோடி செலவில் நவீன தொழில்நுட்ப தொட்டுணர் வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக தமிழக அரசு சார்பில் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய வளர்ச்சித் திட்டங்கள் திட்டங்கள் குறித்து, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
* சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளி விடுதிக்கு ரூ.3.60 கோடியில் சொந்தக் கட்டடம்.
* வேலூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாட்டில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.3.94 கோடியில் அரசு விடுதி.
* திருவண்ணாமலை மாவட்டம் அரசவெளியில் 32 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடத் தொடக்கப் பள்ளியை ரூ.3.50 கோடியில் நடுநிலைப் பள்ளியாக நிலை உயர்த்துதல்.
* 306 பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளிகள், 42 பழங்குடியினர் விடுதிகள், 2 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டைக் கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறை மாற்றப்படும். புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தொட்டுணர் கருவிகளைக் கொண்டு ரூ.1.54 கோடியில் புதிய வருகைப் பதிவு முறை செயல்படுத்தப்படும்.
* பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி வழி கற்பித்தல் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 25 பள்ளிகளில் ரூ.1.29 கோடியில் 25 பள்ளிகளில் அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படும்.
* துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் 1,000 தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் பம்ப் செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். இதற்காக மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை ரூ.7.50 கோடி தாட்கோ மூலம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு வழங்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில்...: கடந்த 5 ஆண்டுகளில் 93 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு சொந்த கட்டடங்களும், 54 விடுதிகளும் தொடங்கப்பட்டுள்ளன. 1,080 மாணவர்கள் விடுதிகளில் ரூ.83 கோடியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் நல விடுதிகளில் 1,500 இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான விடுதிகளில் உணவுப்படி ரூ.450 லிருந்து ரூ.755 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.550 லிருந்து ரூ.875 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 73 பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 100 மேல்நிலைப் பள்ளிகளில் அறிவுத் திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய தொழிற்பயிற்சி கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுயநிதி கல்வி நிறுவனங்களில் இலவச மற்றும் கட்டண இருக்கைகளில் அனுமதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்களை அரசே ஏற்கிறது என்று தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.