ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி ஆசி பெற்ற இந்நாள் ஆசிரியர்கள்.
ஒவ்வொரு சாமானிய மனிதனின் வாழ்வியல் நகர்தலிலும், அவர் தம் சாதனை பயணத்திலும், நிச்சயம் ஒரு ஆசிரியரின் பங்களிப்பு இருக்கும். அந்த வகையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முன்னாள் ஆசிரியர்களின் பாதம் கழுவி, ஆசி பெற்று, முன்னோரை குளிர வைத்துள்ளனர் நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் இந்நாள் ஆசிரியர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் சார்பில், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களின் இதய சங்கமம் என்னும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளியில் பணி புரிந்து, பணி நிறைவு பெற்றுள்ள 69 ஆசிரியர்களை அழைத்து வந்து உரிய மரியாதை செய்தனர்.
பள்ளியின் ஆட்சிக் குழுத் தலைவர் முனைவர் மாணிக்க வாசகம், செயலாளர் நாகராஜன் ஆகியோர் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்நிகழ்வில், டி.வி.டி. பள்ளியின் தலைமையாசிரியர் சிதம்பர தாணு மற்றும் பள்ளியின் அனைத்து பிரிவு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், ``இது ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி. அன்று இவர்கள் காலத்தில் எல்லாம் ஆசிரியப் பணிக்கு மிக பெரிய மரியாதை இருந்தது. இப்போது முகநூல், வாட்ஸ் அப் என இணைய தள பயன்பாட்டின் பெருக்கத்தினால் பலவகை சமூக வளைதளங்களும் வந்து விட்டன. அவை மாணவர்களை, அவர்களது ஒழுக்கக் கூறுகளை பெருமளவில் சிதைக்கவே செய்கின்றன. அவர்களது கவனத்தையும் திசை திருப்புகின்றன.
அந்த சூழலிலும் மாணவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியை, மாணவனை மாண்பு உள்ளவனாய் தக்கவைக்கும் பணியை ஆசிரியர்கள் செய்வது பாராட்டுக்குரியது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இப்பள்ளியில் முன்னாள் ஆசிரியர்களின் சங்கமம் நடத்தி, மரியாதை செய்வதே அன்றைய ஆசிரியர்களின் புலமைக்கு சான்றாக உள்ளது” என்றார்.
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் அன்றைய காலத்தில் ஆசிரியர் பணியின் போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்திய அளவில் தனி சிறப்பு பெற்று விளங்கிய, பிரமோஸ் ஏவுகணையை தயாரித்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, நம்பிநாராயணன் போன்றோருக்கு பாடம் எடுத்த அனுபவங்களையும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் அவர்களைக் கவர்ந்த மாணவர்களையும் பற்றிப் பேசினர். ஆசிரியப் பணியில் அவர்கள் பின்பற்றிய அறக்கூறுகளையும் பகிர்ந்தனர்.
3 தலைமுறை
இந்நிகழ்வு குறித்து டி.வி.டி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சிதம்பரதாணுவிடம் பேசினோம்.’’நானும் இதே பள்ளியில் படித்தவன் தான். எனக்கு ஒன்றாம் வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர், நான் பணிக்கு சேர்த்த போது ஓய்வு பெற்ற ஆசிரியர், நான் தலைமையாசிரியர் ஆகும் போது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என மூன்று தலைமுறைகளை என்னளவிலேயே இன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் அவர்களது அனுபவங்கள் தான் எங்களை செதுக்க உள்ளது. சங்கமம் என நிகழ்வுக்கு பெயர் வைத்தாலும் ஒரு குடும்ப விழாவாகவே இது நிகழ்ந்துள்ளது” என்றார்.
பாதம் கழுவினர்
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற வயதான ஆசிரியர்களை அமர வைத்து, அவர்களை இந்நாள் ஆசிரியர்கள் பாதம் கழுவி, அவர்களது ஆசீர்வாதத்தை பெற்றனர். நிகழ்வின் முடிவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆனந்த கண்ணீர் அலையில் திளைத்துச் சென்றனர்