Breaking News

பாடப் புத்தகங்களில் முப்பரிமாணத் தொழில்நுட்பம்!


தமிழகக் கல்வித் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி (மொபைல் ஆப்) மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் பாடப் புத்தகங்களில் உள்ள படங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் பார்த்து கற்கலாம். மேலும், விடியோ காட்சிகள் மூலமும் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தரமான கல்வியையும், அதற்கேற்ப தரமான புத்தகங்களையும் ஆண்டுதோறும் மேம்படுத்தி பள்ளிக் கல்வித் துறை வழங்கி வருகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளை கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) மேற்கொண்டுள்ளது.

இந்த கவுன்சில் தேசிய அளவில் மாணவர்களிடையே அறிவுக் கூர்மையைக் கண்டறியும் திட்டம் (NATIONAL TALENT SEARCH SCHEME) மூலம் அவர்களின் கல்வித் திறனை அங்கீகரித்து ஊக்கப்படுத்துகிறது.

முப்பரிமாணத்தில் பாட விளக்கம்: அந்த வகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அறிவியல் பாடங்களை எளிதாகவும், முழுமையாகவும் கற்கும் விதத்தில் படங்களை முப்பரிமாணத் தோற்றத்துடனும் (3D), படக் காட்சிகள் வாயிலாகவும் அறிந்துகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

உடல் உறுப்புகளின் செயல்பாட்டை புத்தகத்தில் உள்ள படத்திலிருந்து முப்பரிமாணத் தோற்றத்தில் தத்ரூபமாகத் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக அறிவியல் பாடப் புத்தகம் அச்சிடப்பட்டு நிகழாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் புதிய செயலி: இதுதொடர்பாக புதிய செயலியையும் (மொபைல் ஆப்) பள்ளிக் கல்வித் துறை ஏற்படுத்தியுள்ளது. டிஎன் ஸ்கூல்ஸ் (TN SCHOOLS LIVE ONLINE) என்ற இந்தச் செயலியை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் தங்களது ஆன்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

செல்லிடப்பேசியில் இந்தச் செயலியை இயக்கினால், 10 ஆம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்பு புத்தகத்தை காண வசதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் அவர்கள் படிக்கும் வகுப்பைத் தேர்வு செய்து தங்களது புத்தகத்திலுள்ள படத்தின் அருகில் செல்லிடப்பேசியின் கேமரா மூலம் ஸ்கேன் செய்வது போன்று கொண்டு சென்றால், அந்தப் படம் முப்பரிமாணத் தோற்றத்தில் புத்தகத்துக்கு மேலாக செல்லிடப்பேசி திரையில் துல்லியமாகத் தெரியத் தொடங்குகிறது.

உதாரணமாக, இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட படங்களின் மேல் செல்லிடப்பேசியை வைத்துப் பார்க்கும் போது அவை பல்வேறு வண்ணங்களில் முப்பரிமாணத்தில் தெரியத் தொடங்குகிறது.

இதுவரையிலான நிகழ்வுக்கு செல்லிடப்பேசியில் இணைய இணைப்பு தேவையில்லை. அதன்பிறகு, விடியோவில் காண்பிக்கப்படும் விரிவான விளக்கத்துக்கு இணைய இணைப்பு வேண்டும். அந்த விடியோவில் ஆசிரியர் ஒருவர் சம்பந்தப்பட்ட அறிவியல் விளக்கங்களை மிகவும் எளிமையாவும், தெளிவாகவும் படக் காட்சிகளுடன் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் விளக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று, 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களில் சுமார் 20 பாடங்களும், பிளஸ் 2 வகுப்பில் வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்களில் சுமார் 20 பாடங்களும் இந்த விடியோ தொகுப்பில் முதல் கட்டமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. வகுப்பறையில் மாணவர்களுக்கு படத்தை மட்டுமே வரைந்து காட்டி ஆசிரியர் விளக்கமளிக்காமல், வித்தியாசமான முறையில் மாணவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் படங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் காட்டி கற்றுத் தருவது பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.

மருத்துவ மாணவர்களுக்கான புத்தகங்களில்கூட, இதுபோன்ற முப்பரிமாணத் தோற்றத்தைக் காண முடியாது. இந்தச் செயலியும், அதற்கான முன்னேற்பாட்டுடன் வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களும் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ள குறுந்தகட்டை மாணவர்களும், ஆசிரியர்களும் மடிக்கணினியிலோ, கையடக்கக் கணினியிலோ (டேப்லெட்) நிறுவிக் கொண்டால் விடியோ விளக்கங்களைக் காண இணைய இணைப்பு தேவையில்லை.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி: இந்தத் திட்டத்தின் மூலம் ஆசிரியர் பாடம் நடத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக, ஆசிரியர்களுக்கு இந்தச் செயலியை கையாளப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி மூலம் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் பள்ளிக்கு இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் வீதம் (பத்தாம் வகுப்பு, பிளஸ் 2) பங்கேற்றனர்.

இந்தத் திட்டம் குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா. மார்ஸிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 345 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். இந்தச் செயலி தொடர்பாக ஆசிரியர்கள் நன்கு அறிந்த பிறகு, மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விளக்கத்துடன் பாடம் நடத்துவர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டில் வழங்கப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில், முன்னேற்பாடாக முப்பரிமாணத் தோற்றத்துக்குரிய பிரத்யேக படங்களுடன் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார் அவர்.

பயிற்சி பெற்ற ஆசிரியர் ஈடுபாட்டுடன் இந்தச் செயலி வாயிலாகவும் கற்பித்தால் மாணவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

இந்தச் செயலியை மாணவர்களின் பெற்றோரும் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து பிள்ளைகளுக்கு உதவலாம் என்றார் அவர்.