நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தண்டனை கொடுத்த ஆசிரியை நீக்கம்
காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, ஆத்தூர் அருகே, தனியார் நர்ஸரி, பிரைமரி பள்ளியில் படிக்கும், நான்காம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, "தோப்புக்கரணம்' போடும்படி, தண்டனை வழங்கிய பெண் ஆசிரியையை, பள்ளி நிர்வாகம் நீக்கியது.
ஆத்தூர் அருகே, தலைவாசல் பஞ்சாயத்து, மும்முடி கிராமத்தில், தனியார் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், மும்முடி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த, செல்வம் மகள் விஜயஸ்ரீ, 9, நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.இரு தினங்களுக்கு முன், பள்ளிக்குச் சென்ற மாணவி விஜயஸ்ரீ, "டைரி' எடுத்துவரவில்லை எனக்கூறி, பள்ளி ஆசிரியர், 300 முறை, "தோப்புக்கரணம்' போடும்படி தண்டனை கொடுத்தார். அதனால், மாணவிக்கு, கால் வீக்கம் ஏற்பட்டது குறித்து, அவரது தாய் தனலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமாரிடம் கேட்டார்.அதன்பின், மகள் விஜயஸ்ரீயை, தனலட்சுமி வீட்டுக்கு அழைத்து சென்ற விவரம் குறித்து, ஆத்தூர் தாசில்தார் தேன்மொழி, தலைவாசல் ஆர்.ஐ., கருணாநிதி ஆகியோருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், மாணவியின் தாய் தனலட்சுமியிடம், மாணவிக்கு தண்டனை வழங்கியது தவறு எனக்கூறி, அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து, நேற்று முன்தினம், "காலைக்கதிர்' நாளிதழில், படத்துடன், செய்தி வெளியானது. அதையடுத்து, நான்காம் வகுப்பு மாணவிக்கு, "தோப்புக்கரணம்' தண்டனை வழங்கியது குறித்து, சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் உத்தரவுப்படி, ஆத்தூர் ஆர்.டி.ஓ., ஜெயச்சந்திரன், தாசில்தார் தேன்மொழி, ஆர்.ஐ., வி.ஏ.ஓ., மற்றும் நர்ஸரி, பிரைமரி பள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம், விசாரணை நடத்தினர்.விசாரணையில், பெண் ஆசிரியை புவனேஸ்வரி, மாணவிக்கு தண்டனை வழங்கியது தெரியவந்தது. அதையடுத்து, ஆசிரியை புவனேஸ்வரியை, பள்ளி நிர்வாகம் நீக்கம் செய்தது. மேலும், இதுபோன்ற தவறு நடக்கக் கூடாது என, பள்ளி கல்வித்துறை, வருவாய்த்துறையினர், எச்சரிக்கை செய்தனர்.