சேலம், சூரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில், விஜய் நடித்த கத்தி, அரண்மனை ஆகியவற்றின் புதுப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் சார்பில், நேற்று சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமாரிடம் புகார் மனு வழங்கப்பட்டது.அதன் விவரம் வருமாறு:சேலம் சூரமங்கலம் அருகில், புனித சூசையப்பர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில், கடந்த அக்., 31ம் தேதி, சமீபத்தில் வெளியான அரண்மனை திரைப்படமும், நவ., 7ம் தேதி, கத்தி திரைப்படமும், சட்ட விரோதமாக திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.படம் பார்ப்பதற்கு, மாணவியரிடம், 15 ரூபாய் முதல், 25 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகமே, திருட்டு தனமாக புதிய படங்களை திரையிட்டது கண்டிக்கத்தக்கது.மேலும், மாணவியரிடம் பல்வேறு சட்ட விரோத வசூல் நடத்தியும், ஏற்க மறுக்கின்றவர்களுக்கு பல்வேறு நெருக்கடி, தண்டனை கொடுத்து, மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், மாணவியர் மற்றும் பெற்றோரை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் கூறியதாவது: பள்ளியில் படம் ஒளிப்பரப்பப்பட்டதா அல்லது விடுதியில், படம் ஒளிபரப்பினார்களா என்று தெரியவில்லை. அவ்வாறு புதிய படம் ஒளிப்பரப்பி இருந்தால், அது தவறாகும். இந்த பிரச்னையை போலீஸ் ஸ்டேஷனில் தான் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக, விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.பள்ளியில், புதிய படம் ஒளிபரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
புனித சூசையப்பர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜோஸ்பின் மேரி ஸ்டெல்லா கூறியதாவது: குழந்தைகள் தின விழா வருவதை முன்னிட்டு, கார்ட்டூன் படம் போடுவதாக தெரிவித்தனர். கேசட் சரியாக வேலை செய்யவில்லை என்பதால், பள்ளி மாணவி யாரோ கொண்டு வந்த, புதிய பட, "டிவிடி' கேசட்டை போட்டுள்ளனர். படத்தை பற்றி எங்களுக்கு அவ்வளவு விவரங்கள் தெரியாது. ஆனால், உடனடியாக, அந்த டிவிடியை போட வேண்டாம் என்று நிறுத்திவிட்டோம். எதிர்காலத்தில் இதுப்போன்ற பிரச்னைகள் வராமல் பார்த்து கொள்கிறோம் என்றார்.