Breaking News

நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி, களஞ்சியம் செயலி முறையை ரத்து செய்ய வேண்டும் - அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பணம் தொகையை பெறுவதற்கு அரசு ஊழியர்கள் களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கருவூல ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். 



எனவே இனி வரும் காலங்களில் அனைத்து பணவரைவு அலுவலர்களும் தங்களது அலுவலகத்தின் அனைத்து பணியாளர்களையும் பண்டிகை முன்பணத்தினை பெற களஞ்சியம் செயலி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதில், பல்வேறு நடைமுறை சிக்கலை உருவாக்கும் என்பதால் களஞ்சியம் செயலி முறையை ரத்து செய்ய வேண்டும் என அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


ஏனென்றால் தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு மாத காலம் இருக்கக்கூடிய நிலையில் 'களஞ்சியம்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை, சாத்தியம் இல்லாத அவசரகதியில் உடன் அமல்படுத்த முடியாத உத்தரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கருதுகிறது. பொதுவாக தமிழ்நாட்டில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அலுவலக உதவியாளர் முதல் உயர் அதிகாரி வரை பணிபுரிகின்றனர். ஆனால் அத்தனை பேரும் ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பார்களா, அப்படியே வைத்திருந்தாலும் எல்லோரும் 'களஞ்சியம்' செயலியை பயன்படுத்த தெரிந்தவர்களாக இருப்பார்களா என்றால் சந்தேகம் தான். பல நேரங்களில் தொழில்நுட்ப குறைபாடுகளால் செயலிழந்த செயலியாக 'களஞ்சியம்' செயலி இருக்கிறது.


இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கருவூலத்துறையில் அதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதிய பயிற்சி இல்லை. எனவே, பண்டிகை முன்பணத்திற்கு களஞ்சியம் செயலி மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தாமல் ஊழியர் நலன் கருதி தற்போதைய ஆணையாளரின் உத்தரவை ரத்து செய்து பழைய முறையில் அனுமதித்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.