வானிலை மையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 2024 அக்டோபர் 23 ஆம் தேதி கிழக்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டி வடமேற்கு வங்காள விரிகுடாவை அக்டோபர் 24ஆம் தேதி காலைக்குள் அடைய அதிக வாய்ப்புள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு 'டானா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய புயலால், தமிழகத்திற்கு பெரிய பாதிப்போ அல்லது கனமழையோ இருக்காது என கூறப்படுகிறது.
வானிலை மையம் எச்சரிக்கை:
இதனிடையே, வடதமிழகத்த்ன் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
21.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வோர், திருப்பத்தார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல்,கரூர். திருச்சிராப்பள்ளி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24,102024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.