ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017 பிப்ரவரியில் வெளியிட்டது.
அதில், பிஎட் படிப்பில் இறுதி செமஸ்டர் எழுதியவர்களும் தேர்வு எழுதலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பி.எட் இறுதி செமஸ்டர் எழுதிவந்த ராஜேஸ்வரி என்பவர் தேர்வு எழுதினார். தகுதி தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார். ஆனால், பி.எட் இறுதி செமஸ்டரில் அவருக்கு அரியர்ஸ் விழுந்தது. இதையடுத்து, 2018ல் அவர் அரியர்ஸ் பாடத்தில் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில், ராஜேஸ்வரியும் விண்ணப்பித்திருந்தார். அதன்பிறகு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், அவர் பெயர் தகுதி பெறாதவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, தன்னை பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியலில் சேர்க்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு பிளீடர் சி.கதிரவன் ஆஜராகி, மனுதாரரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்து அவரின் சான்றிதழ்களை சரிபார்த்தபோது அவர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதிய பிறகுதான் பி.எட் தேர்வை முடித்துள்ளது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அவர் ஆசிரியர் நியமன பட்டியலில் தகுதி பெறாதவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வாதிட்டார்.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கவிதா ராமேஷ்வர் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் 2017ல் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், 2018ல்தான் பி.எட் படிப்பை முடித்துள்ளார் என்பதால் அவரது பெயர் நியமன பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள சரத்துகளின் அடிப்படையிலேயே மனுதாரர் தேர்வு எழுதி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். எனவே, இதில் எந்த விதி மீறலும் நடைபெறவில்லை. எனவே, மனுதாரரின் பெயரை பட்டதாரி ஆசிரியர் நியமன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.