Breaking News

வேலூர்: பள்ளிச் சீருடையில் மாணவிக்கு வளைகாப்பு... வைரலான வீடியோ.. அரசுப்பள்ளியில் அதிர்ச்சி! ரீல்ஸ் மோகத்தில் மாணவிகள் அலப்பறை

 

வேலூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவிகள் சிலர் கும்பலாகச் சேர்ந்து பள்ளியின் மேல்தளத்துக்குச் சென்று ஒரு மாணவிக்கு `வளைகாப்பு' நிகழ்ச்சி நடத்துவதைபோல ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.




அந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில், மாணவிகள் அனைவரும் பள்ளி சீருடையில்தான் இருக்கின்றனர். ஒரு மாணவிக்கு மட்டும் புடவை அணிவிப்பதைபோல துப்பாட்டாவைச் சுற்றிவிட்டு, வயிற்றுப் பகுதியிலும் துணியை மறைத்து கர்ப்பிணிபோல நடித்துகாட்டச் செய்கின்றனர். பேப்பர்களையும் பூ மாலையைபோல சுற்றி மாணவிக்கு அணிவிக்கின்றனர். கூடியிருந்த மாணவிகள் அனைவரும் தாம்பூலத்தில் ஆரத்தி எடுத்து சந்தனம் பூசுகின்றனர். வளைகாப்புக்குத் தேவையான சிலப் பொருள்களையும் வாங்கி வரிசையாக வைத்திருக்கின்றனர்


வளைகாப்பு `ரீல்ஸ்' காட்சி

நலங்கு வைப்பதைபோன்ற இந்தக் காட்சிகள் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தியிருக்கிறார்.

முதற்கட்ட விசாரணையில், பள்ளிக்குள் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது' என்று அறிவுறுத்தியும், மாணவிகள் செல்போனை மறைத்து எடுத்துவந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. `

எல்லோரும் கண்டிப்பாக வரணும்' என்று டிஜிட்டல் அழைப்பிதழையும் தயார்ச் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கின்றனர். மாணவியின் பெயரோடு இணைத்து ஒரு ஆணுடைய பெயரையும் குறிப்பிட்டிருக்கின்றனர்.


இத்தனைக்கும் தைரியமாக அரசுப்பள்ளியின் பெயரையும் குறிப்பிட்டு, `இங்குதான் நடக்கப்போகிறது' என இடம், தேதியையும் குறிப்பிட்டிருக்கின்றனர். அதன்படி பார்த்தால், கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதியன்று இந்த ரீல்ஸ் வீடியோவை மாணவிகள் எடுத்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, வீடியோவில் உள்ள மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து பேசவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கின்றனர்.