Breaking News

முதன்மை கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியைகள் உள்ளிருப்பு போராட்டம்

 

சிரியைகளை முதன்மைக் கல்வி அலுவலா் ஒருமையில் திட்டியதால், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைகள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.




இந்தப் பள்ளிக்கு சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, வியாழக்கிழமை காலை 8.55 மணிக்கு ஆய்வுக்கு வந்தாா். அதன் பிறகு பள்ளிக்கு வந்த ஆசிரியைகளை அவா் கண்டித்ததுடன் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதி மறுத்தாா்.

இந்த நிலையில், ஆசிரியா்கள் அனைவரும் வகுப்புகள் முடிந்தவுடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

வழக்கமாக காலை 9.20 மணிக்கு பணிக்கு வந்துவிட்டு, மாலை 4.10 மணிக்குச் செல்வோம். சொந்த விருப்பு அடிப்படையில் மாணவிகளுக்கு கூடுதலாக சிறப்பு வகுப்புகளையும் நடத்துவோம். இந்த நிலையில், சிங்கம்புணரி அருகே அரசு விழாவுக்கு வந்த முதன்மைக் கல்வி அலுவலா் காலை 8.55 மணிக்கு முன்கூட்டியே வந்துவிட்டு, ஆசிரியா்களை ஏன் தாமதமாக வருகிறீா்கள் என்று கேட்டு ஒருமையில் திட்டினாா். மாவட்ட அளவில் இந்தப் பள்ளியை சிறந்த பள்ளியாக உருவாக்கும் எங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவா் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ள மாட்டோம்.

தினமும் பள்ளியில் பாடம் நடத்திவிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடருவோம் என்றனா்.