இன்று காலை சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர், சஸ்பெண்ட் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது தவறு இல்லை. அவர்களை திரும்ப பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பள்ளியை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த டிஎஸ்பி ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ்குமார், தாசில்தார் ஜெகதீசன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 4 ஆசிரியர்கள் மீதும் தவறு இல்லை. எனவே சஸ்பெண்ட் செய்தவர்களையும், பணியிடமாற்றம் செய்தவர்களையும் திரும்ப பெறவேண்டும். ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கூறி கோஷமிட்டனர். பின்னர் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆரணி-வேலூர் சாலை சேவூர் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.