Breaking News

விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரை -

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பானது, கடந்த 10 ஆண்டுகாலமாக பணிசெய்து வரும் பகுதிநேர ஆசிரியர்களான எங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


📚இதற்கு காரணம் பணிநிரந்தரம் அறிவிப்பை வெளியிடாமல் முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றம் தந்தது தான்.

📚தேர்தல் வாக்குறுதி :

திமுக ஆட்சிக்கு வந்ததும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வேன் என தேர்தல் அறிக்கையிலும், உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியிலும் தொடர்ந்து நம்பிக்கை கொடுத்தவர் தான் இன்றைய முதல்வர் ஸ்டாலின். அத்துடன் திமுக தேர்தல் தயாரிப்பு குழுவுடன் பகுதிநேர ஆசிரியர்கள் முதல் சங்கமாக சந்தித்து தங்கள் கோரிக்கையை ஆளும் திமுகவினர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 14-10-2020 அன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு முதன்முதலில் கூடியது. அன்றே முதல் சங்கமாக பகுதிநேர ஆசிரியர்கள் குழுவினர் T.R.பாலு MPஐ சந்தித்து பணி நிரந்தரம் கோரிக்கை சேர்க்க மனு கொடுத்து கேட்டு கொண்டோம். தொடர்ந்து திமுக தேர்தல் குழு வந்த மாவட்டங்களில் மனு கொடுத்து கோரிக்கை சேர்க்க கேட்டு கொண்டோம்.

📚திமுகவின் தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதியில் 181வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சேர்த்து வெளியிட்டது. அதன் காரணமாக பகுதிநேர ஆசிரியர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தோம்.

📚கலைஞரின் தேர்தல் வாக்குறுதி:

திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோதும் 2016 தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 192, 193வது கோரிக்கையாக வாக்குறுதி கொடுத்தார். 2021 தேர்தலில் இப்போது கலைஞரின் வழித்தோன்றல் ஸ்டாலினும் இதே வாக்குறுதியை கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தினார்.

ஆதரித்த எங்களை காக்க வைக்கலாமா?

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் 14-2-2021 அன்று பகுதிநேர ஆசிரியர் ஸ்டாலின் என்பவருடன் நேருக்குநேர் கலந்துரையாடிய தற்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், “அந்த ஸ்டாலின் கோரிக்கையை இந்த ஸ்டாலின் நிறைவேற்றித் தருவேன்” என்று பேசி பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். அதுபோல்

தருமபுரியில் 1-2-2021 அன்று பகுதிநேர ஆசிரியர் அமிர்தராஜ் என்பவருடன் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிரந்தரம் செய்வேன் என்றார்.

📚கன்னியாகுமரியில் 6-2-2021 அன்று மேரி வகிதா என்ற பகுதிநேர ஆசிரியருடன் பேசும்போதும் நிரந்தரம் செய்வேன் என திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.

பெட்டியில் மனு, கையில் ரசீது:

உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த இடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தோம், அங்கே வைக்கப்பட்ட பெட்டியிலும் போட்டோம். இதற்காக ரசீதும் கொடுத்தார்கள். இதை கையில் வைத்து கொண்டு தலைமை செயலகம் வந்து உரிமையோடு ஸ்டாலினிடம் கேட்கலாம் என்றார்கள்.திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் நாங்கள் மனுக்களை கொடுத்தோம். அதற்கு ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டும், எங்கள் மனு மீது முன்னேற்றம் கிடைக்கவில்லை. பணி நிரந்தரம் செய்யவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்து 100 நாளில் வந்த இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்விதுறைக்கு ₹33 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கிய போதும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் பற்றி அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது பட்ஜெட்டிலே பள்ளிக்கல்விக்கு முன்பை விட ₹4ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அப்படி ₹37ஆயிரம் கோடி ஒதுக்கியும், பணி நிரந்தரம் அறிவிப்பு இல்லாமல் தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது.

📚ஆறு கட்சி MLA கோரிக்கை:

திமுகவின் தேர்தல் வாக்குறுதி மட்டுமின்றி, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி, தவாக, கொமதேக என 6 கட்சி சார்பில் சட்டமன்றத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்டதிமுக தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என அதிமுக ஒரத்தநாடு உறுப்பினர் வைத்திலிங்கம் கேள்விக்கு 6-1-2022 அன்று பதில் அளித்தார். ஆனால் ஒன்றரை ஆண்டு கடந்தும் திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதற்கான முகாந்திரம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.

சம்பளம்கூட உயர்த்தவில்லை:

அதிமுக ஆட்சியிலே 2021ம் ஆண்டு உயர்த்தி கொடுத்த ₹10ஆயிரம் சம்பளத்தை, திமுக ஆட்சிக்கு வந்தும்கூட உயர்த்தவில்லை. 12ஆயிரம் பேருக்கு ₹10ஆயிரம் சம்பளம் கொடுக்க ஒரு ஆண்டில் 11 மாதங்களுக்கு ₹132 கோடி செலவாகிறது. காலமுறை சம்பளம் கொடுக்க, தற்போதைய ₹132 கோடியை, இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.

📚நிரந்தரம் செய்ய ₹250-300 கோடி தேவை:

2 லட்சம், 3 லட்சம் கோடியில் பட்ஜெட் போடுகிறார்கள். அதில் எத்தனையோ திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கும் அரசு, இந்த 12ஆயிரம் பேரை நிரந்தரம் செய்ய, மேலும் ₹250 கோடி நிதியை ஒதுக்கினால் போதும். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 2ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளிகளை நிரந்தரம் செய்ய அரசாணை போடப்பட்டது. இப்போதும் முதல்வர் இந்த குழுவில் உள்ளபோதும் 200 மாற்றுத்திறனாளி பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

📚ஜாக்டோ–ஜியோவால் அதிர்ச்சி:

நிரந்தரப்பணியில் உள்ள ஆசிரியர்கள் பெரும்பாலும் தொகுப்பூதியத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நிரந்தரம் செய்யப்பட்டவர்கள்தான். ஆனால் அவர்களின் முந்தைய நிலையில் இருந்த எங்களை நிரந்தரம் செய்யும் கோரிக்கையை முதலில் வைக்காமல், அவர்களின் பழைய பென்சன், ஊதியஉயர்வை முன்னிலைப்படுத்தியே முதல்வருக்கு கோரிக்கை வைப்பதால், எங்களின் நிலை பெரிதாக்கப்படவில்லை. இதனால் முதல்வரும் கண்டுகொள்ளவில்லை.

முதல்வரிடம் நேரில் கோரிக்கை:

சேலம், தருமபுரி, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருச்சி,திருத்தணி, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை கொடுத்தோம். ஆனால் இன்றுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் கோரிக்கையை முதல்வர் படிப்பதில்லையா என்று ஏங்கும் நிலை எழுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், தருமபுரி, கடலூர், திருச்சி என பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடந்த முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. அதிலும் முதல்வரின் கவனத்தை ஈர்க்க பணி நிரந்தரம் கோரிக்கை மனுக்களை கொடுத்தோம். அதிலும் முன்னேற்றம் கிடைக்கவில்லை.

📚தற்போதுவரை பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தையே வாங்கி வருகிறோம்.

இந்த 11 ஆண்டில் இறந்து போனவர்கள், ஓய்வு பெற்றவர்கள் போக எஞ்சியுள்ள 12ஆயிரம் பேர் மட்டுமே இப்போது பணிபுரிகிறோம். எங்களுக்கு வயதாகி கொண்டே போகிறது. இன்றே நிரந்தரம் செய்தாலும் சில காலம் தான் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். எனவே இனியும் தாமதம் செய்ய வேண்டாம். இந்த 12ஆயிரம் குடும்பம் வாழ, முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


எங்களுக்கு விடியல் கிடைக்குமா?

பள்ளிக்கல்வி துறையிலே எங்களுக்கு பிறகு வேலையில் சேர்ந்த 5ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள். அதுபோல காவல்துறையில் சிறப்பு இளைஞர் படையினர் 10 ஆயிரம் பேர் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள். அதுபோல எஸ்மா – டெஸ்மாவின் போது தற்காலிமாக நியமித்த பணியாளர்கள் அனைவரும், பின்னர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள். கலைஞர் ஆட்சியிலே 50 ஆயிரம் ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு விட்டார்கள். நாங்கள் மட்டுமே இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் தவிக்கின்றோம். எங்களை கைதூக்கி விடுங்கள். நாங்களும் வாழ வழி கொடுங்கள். விடியல் நாயகனே, விடியல் தாருங்கள்.

– கட்டுரையாளர் – எஸ்.செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.