Breaking News

மாணவர்களை தயார்படுத்தும் பாடத்திட்டங்கள் : செங்கோட்டையன் தகவல்

துாத்துக்குடி: ''மத்திய அரசின் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றிபெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்,'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறும் வகையில், பாடதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு, 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவர்களுக்கு கற்றுத்தரப்படவுள்ளது. பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. 9முதல் 12ம் வகுப்பு வரை ரூ.483 கோடியில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளன. 12 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. யோகா மற்றும் விளையாட்டிற்காக 45 நிமிடங்கள் பள்ளி நேரத்தில் ஒதுக்கப்பட உள்ளது, என்றார். அமைச்சர் கடம்பூர் ராஜு உட்பட பலர் பங்கேற்றனர்.