தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தமிழக மாநிலப் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியக்கும் குழுவில் இடம்பெற்றிருக்கும் யாரையும் இடமாற்றம் செய்யக் கூடாது என்றும்
உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் வகையில் பல அதிரடி
நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்ற தவல்கள் வெளியான நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
10ம் வகுப்பு மாணவர் ஒருவரின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த பொது நலன் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில், என் மகன் அடுத்த ஆண்டு 11ம் வகுப்புக்கு செல்லவிருக்கிறார். எனவே அவர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்கான முயற்சியாக வலுவான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் வரை பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுக்களை நீதிமன்ற கண்காணிப்பில் இயக்க வேண்டும் என்றும், அதில் இடம்பெறும் யாரையும் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த
மனு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் விளக்கம் அளிக்கும் வகையில், வழக்கு ஆகஸ்ட் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கப்பட்ட இரண்டு குழுக்களில் இடம்பெற்றிருக்கும் எந்த அதிகாரியையும் பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று கூறினார்.
அப்போது, பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குற்றம்சாட்டினார்.
இதைக் கேட்ட நீதிபதி, பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் குழுக்கள் அளிக்கும் பரிந்துரையை அவர்தான் செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பதாகவும், குழுக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை செயலருக்கு வழங்கும் வகையில் அரசு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் பணி முடியும் வரை அவரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.