ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதத்தில் மாணவர்கள் கையேடு (டைரி)
வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் சாதனை படைக்க முயற்சித்து வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 352 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமையாசிரியர், 3 பட்டதாரி ஆசிரியர்கள், 7 இடைநிலை ஆசிரியர்கள், 3 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இப்பள்ளி ஆசிரியர் செந்தில்நாதன் இப்பள்ளியில் பல புதுமைகளை புகுத்தி வருகிறார்.
4 டி தொழில் நுட்பம்: இங்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ள லேப்டாப், புரொஜக்டர் மூலம் மாணவர்களுக்கு '4 டி' தொழில் நுட்பத்தில் கல்வி கற்பித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.மாணவர் கையேடு: மெட்ரிக் பள்ளிகளில் வழங்கப்படும் மாணவர் கையேட்டை போன்று இப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தார். இதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டு வருகிறது.
முதலில் கடைகளில் கிடைக்கும் மாணவர்கள் கையேட்டை வழங்கி வந்தனர். தற்போது
பள்ளி விபரங்களுடன் வெளியிட செந்தில் நாதன் முயற்சி எடுத்துள்ளார்.
பெற்றோர் ஒத்துழைப்பு: பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமீன் மாலிக் உசேன், கிராம கல்விக்குழுத்தலைவர் ஜாஸ்மின் நிஜார் ஆகியோர் பெற்றோர் கழக கூட்டத்தை
கூட்டினர். அதில் மாணவர்களுக்கு கையேடு வழங்குவதற்கான
செலவு தொகையை பெற்றோர் ஏற்பது
என முடிவு செய்யப்பட்டது.
மாணவர் கையேடு: கையேட்டில் பள்ளியில் உள்ள அனைத்து
விபரங்கள், ஆசிரியர்கள், அவர்களது படிப்பு, மாணவர்கள், அவர்களின் செயல்பாடுகள், போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள், சாதனை படைத்த மாணவர்கள், பள்ளிகளின் விதிமுறைகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள், தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, மாணவர்கள் உறுதிமொழி, பெற்றோர்கள் உறுதிமொழி, அவர்களது தொடர்பு அலைபேசி,தொலை பேசி எண்கள் உட்பட அனைத்து விபரங்களும், இடம் பெற்றுள்ளன.
இதில் தினசரி பள்ளி நடவடிக்கை, மாணவர்களின் திறன், வீட்டுப்பாடம் உள்ளிட்ட குறிப்பு பெற்றோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஆசிரியர் செந்தில் நாதன் தெரிவித்ததாவது: எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு இணையான கல்வித்தரம், வசதிகளை பெற வேண்டும், என நினைத்தோம். அதற்கு பெற்றோர், தலைமையாசிரியை தமிழரசி, மற்ற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். இதன் காரணமாக மாணவர் கையேட்டில் மாணவர்கள் படைப்பு, பள்ளி செயல்பாடு குறித்த ஆண்டு மலர் வெளியிட முயற்சித்து வருகிறேன். இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியிடப்படும், என்றார்.
தலைமையாசிரியை தமிழரசி தெரிவித்தாவது: பெற்றோர், ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு கல்வி, வசதிகள், போன்ற வற்றில் தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு எங்கள் பள்ளி வெற்றி நடை போட்டு வருகிறது. தொடர்ந்து இதனை செயல்படுத்தவுள்ளோம், என்றார்.